அவதார் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகிய அவதார் படத்திம் மூன்றாம் பாகமான அவதார்: பயர் அண்ட் ஆஷ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. வசூலில் சாதனை படைத்த இப்படம் 3 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படமும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து, ‘அவதார்’ தொடரின் 3-ஆம் பாகமான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ‘மாங்குவான்’ அல்லது ‘ஆஷ் பீப்புள்’ எனப்படும் புதிய நாவி குலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலைப் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள், பெரும் வெடிப்பால் தங்கள் வாழ்விடத்தை இழந்தவர்கள் எனக் கதையில் கூறப்படுகிறது. இயற்கையை நேசிக்கும் நாவிகளுக்கு மாறாக கோபமும் வெறுப்பும் நிறைந்த குணாதிசயத்துடன் இந்தக் குலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஷ் பீப்புளின் தலைவியான ‘வராங்’ கதாபாத்திரத்தில் ஓனா சாப்லின் நடித்துள்ளார்.
உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ.8000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.