“சுயநலத்தாலயும் துரோகத்தாலயும் கோட்டை விட்டுட்டீங்க!”.. அதிமுக-வுக்கு கிடைச்சிருக்கணும்.. தவெக வெற்றியை வைத்து சசிகலா போட்ட அதிரடி கணக்கு..!!
SeithiSolai Tamil May 14, 2026 12:48 AM

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம், இன்று சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு சிலரது சுயநலமும் துரோகமுமே காரணம் என அவர் சாடியுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் விடுத்த கோரிக்கையை ஏற்காததால் தான், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் தாம் தனிக்கட்சி தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் விளக்கியுள்ளார். அதிமுகவின் இந்தத் தோல்விக்குக் காரணமானவர்கள்தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றியை அதிமுகவே பெற்றிருக்க முடியும் என்றும், அதற்கான வாய்ப்பைத் தனிமனித விருப்பு வெறுப்புகளால் கோட்டை விட்டுவிட்டதாகவும் சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். சில நிர்வாகிகள் திமுகவுடன் கைகோர்த்துச் செயல்பட்டது தொண்டர்களுக்குச் செய்த துரோகம் என்று விமர்சித்துள்ள அவர், “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற தாரக மந்திரத்தை இனியாவது உணர்ந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சியின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்களை எம்.எல்.ஏ-க்களே இப்போது அடையாளம் காட்டத் தொடங்கியிருப்பது வேதனையளிப்பதாகக் கூறியுள்ள அவர், ஒற்றுமையே அதிமுகவைக் காக்கும் ஒரே வழி என ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.