திருவள்ளூர்: லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு இருட்டில் பாலியல் தொல்லை... இளைஞரைத் தேடும் போலீஸ்!
Vikatan May 15, 2026 11:48 PM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பணி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல 40 வயதாகும் பெண் ஒருவர் ஆமூர் ஏரிக்கரை சாலை பகுதியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபரும் அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். ஏரிக்கரை கோவில் அருகே சென்றபோது, அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்தி, அந்தப் பெண்ணை கீழே இறங்க கூறியிருக்கிறார். உடனே அவரும் இறங்க, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இளைஞர், அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கத்தி முனையிலேயே பெண்ணை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த பெண், இளைஞருடன் போராடியிருக்கிறார்.

பாலியல் தொல்லை

இந்தச் சமயத்தில் அவ்வழியாக ஒரு பைக் வந்திருக்கிறது. அதைப் பார்த்த இளைஞர், பெண்ணை அங்கேயே விட்டு விட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். அதன்பிறகு அந்தப் பைக்கில் வந்தவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறிய பெண் கதறி அழுதிருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிக் கொண்ட அந்த நபர், பொன்னேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு அந்தப் பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றுவிசாரித்ததோடு பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞரை தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``சைனவரம் பகுதியில் இருந்து ஆமூருக்கு செல்லும் 3 கிலோமீட்டர் தூர ஏரிக்கரை வழி இருட்டாகவே உள்ளது. மேலும் ஆமூருக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால் ஆமூருக்கு செல்பவர்கள், அவ்வழியாக வரும் பைக், வாகனங்களில் லிஃப்ட் கேட்டு செல்வதுண்டு. இரவு நேரங்களில் ஏரிக்கரை பகுதியின் இருட்டை பயன்படுத்தி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே சைனவரம், மாதவரம், தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு போதிய வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு இருள் நிறைந்த ஏரிக்கரை சாலையில் போதிய மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.