தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் தினமும் ஒரு வார்த்தைப் போரால் பரபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே வெடித்துள்ள நேரடி மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. “உங்களுக்கு இருக்கும் பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மிக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து காங்கிரஸ் எம்பி விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தனது பாணியில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழிசை. பதவிக்காக கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, குறுக்கு வழியில் சென்று ஆட்சியில் ஒட்டிக்கொண்டதாகக் காங்கிரஸை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சித் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாகக் கமெண்ட்களைப் பகிர்ந்து வருவதால், தற்போதைக்கு இணையத்தில் மிக ஹாட் டாபிக்காக இந்த விவகாரம் மாறியுள்ளது.