17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
குலசேகரன் முனிரத்தினம் May 25, 2026 12:44 PM

Madurai Murder: தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொண்டாட்ட மனநிலையிலுருந்து வெளிவரவில்லை, அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை கடும் கண்டனம்

மதுரையில் 17 வயது சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த காணொளியில் நீங்கள் காண்பது, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் ரத்தக் கறைகள் ஆகும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலைகாரர்கள் தடையின்றி நடமாடுகின்றனர். மாநிலக் காவல்துறை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மேலும், புதிய தவெக அரசும் தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து இன்னும் வெளிவராமல், களத்தில் அரங்கேறும் கொடூரமான உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

கொடூரக் கொலை - நடந்தது என்ன?

மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள வணிக வளாகத்தில் உறங்கிக் கோண்டிருந்த குபேந்திரன் என்பவரை, இன்று அதிகாலை முத்துமணி என்பவரது தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து சரமாரியாக வெட்டியுள்ளது. உடல் முழுவதும் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து குபேந்திரனின் உடலை முதல்தளத்தில் இருந்து கீழே தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடும் பணிகளையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.


கொலைக்கான காரணம் என்ன?

முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ள தகவலின்படி, சித்திரை திருவிழாவின் போது நிகழ்ந்த மோதலால் ஏற்பட்ட முன்பகை காரணமாக சிறுவன் கொலை செய்ய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த குபேந்திரன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதகாவும் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, முத்துமணி தலைமையிலான கும்பலில் ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இடம்பெற்று இருந்ததும் தெரிய வந்துள்ளது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.