அதிகாலையிலேயே நடுங்கும் தமிழகம்..! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. கொந்தளித்த எம்பி கனிமொழி…!!
SeithiSolai Tamil May 25, 2026 02:48 PM

மதுரை உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில், இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகம் உள்ளது. இந்த வாகன காப்பக பகுதியில், இன்று அதிகாலை குபேந்திரன் (வயது 17) என்ற சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் குபேந்திரனைச் சூழ்ந்துகொண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் குபேந்திரன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தான். கொலை செய்த உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்த கொடூர கொலை குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் குபேந்திரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை தொடங்கினர்.

போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில், இக்கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முத்துமணி என்ற இளைஞர் உள்பட 5 பேரை போலீசார் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுரையில் சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போது, சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, முத்துமணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நோக்கில் சிறுவன் குபேந்திரனைத் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலையான சிறுவன் குபேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழியும் இதற்கு கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.