மு.க ஸ்டாலினை பார்த்து மேயர் பிரியா கத்துக்கணும்..! “முதல்ல முதலமைச்சர் விஜயை போய் பாருங்க”… இல்லனா சென்னை முடங்கிவிடும்.. பாஜக நிர்வாகி எச்சரிக்கை..!!
SeithiSolai Tamil May 25, 2026 03:48 PM

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, மேயர் பிரியா உடனடியாக முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கராத்தே தியாகராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“சென்னை மாநகராட்சியின் சார்பில் வழக்கமாக நடைபெற வேண்டிய மாதாந்திர கூட்டம் இதுவரை நடைபெறவில்லை; அதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, மேயர் பிரியா பலமுறை மாநகராட்சி கூட்டத்தை நடத்துமாறு கமிஷனரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கவில்லை.

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும், அவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதேபோல், சென்னை மேயர் பிரியாவும் தனது ஆணவத்தைப் பார்க்காமல், முதலமைச்சர் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வேண்டும். அதுதான் சென்னை மாநகராட்சியின் மரபாகும்.

மறைந்த ஜெயலலிதா அவர்கள் இரண்டாவது முறை முதலமைச்சராகப் பதவியேற்ற போது, அப்போதைய சென்னை மேயர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பேராசிரியர் அன்பழகனும் அந்த விழாவுக்குச் சென்றனர். அவர்கள் அங்கு 6-வது வரிசையில்தான் அமர வைக்கப்பட்டனர்.

அதேபோல், சுனாமி பாதிப்பின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நிவாரண நிதி வழங்குவதற்காக மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அப்போது 50 பேர் நடுவில்தான் அவரை உட்கார வைத்தார்கள். அவர் வரிசையில் நின்றுதான் முதலமைச்சரைப் பார்த்தார். அப்போது சென்னை மேயராகப் பொறுப்பில் இருந்த நானும் அவருடன் சென்றிருந்தேன்.

எனவே, கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் எப்படிச் செயல்பட்டாரோ, அதைப் போல மேயர் பிரியாவும் உடனடியாக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால், சென்னையில் எந்தப் பணிகளும் நடக்காமல் மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துவிடும். மேயர் பிரியா, முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மு.க.ஸ்டாலின்தான் செய்து கொடுக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.