மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தைப் போன்றே, ஹரியானா மாநிலம் குருக்ராமிலும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவரை அவரது லிவ்-இன் பார்ட்னர் மூன்று நாட்களாகப் பூட்டிய அறைக்குள் வைத்து சித்திரவதை செய்து, ரகசிய உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீ வைத்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், குருக்ராமில் உள்ள ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் பயோடெக் (Biotech) படித்து வருகிறார். இவருக்கும் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிவம் (19) என்ற வாலிபருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதள செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறவே, ஷிவம் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக ஒரு விடுதியில் ஷிவமுடன் ‘லிவ்-இன்’ முறையில் ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல மாணவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட ஷிவம், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 16 முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக அந்தப் பெண்ணைப் பூட்டிய அறைக்குள் வைத்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார். ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் தலையில் அடித்தும், சுவர்கள் மற்றும் ஃபர்னிச்சர்களில் தலையை முட்டியும் தாக்கியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த மண் பானையை மாணவியின் தலையிலேயே உடைத்துள்ளார்.
இதன் உச்சக்கட்டமாக, மாணவியின் ரகசிய உறுப்பில் சானிடைசர் திரவத்தை ஊற்றி தீ வைத்துள்ளார். கத்தியால் அவரது கால்களில் சரமாரியாகக் குத்திய ஷிவம், “உன்னை இனி நடக்க முடியாமல் செய்து விடுவேன்; நீ எப்பொழுதும் ஒரு தாயாகவே மாற முடியாது” என்று மிரட்டியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டும் மிரட்டியுள்ளார். வியாழக்கிழமை இரவும் மாணவியை ஷிவம் கொடூரமாகத் தாக்கிக் கொண்டிருந்த போது, தற்செயலாக மாணவியின் தாய் திரிபுராவில் இருந்து மகளுக்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் மகளின் மரண ஓலத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு, உடனடியாக டெமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளி ஷிவம் உடனடியாக சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .