சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபகரமான படமாக அமைந்துள்ளது. விஜய் அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் தொடர்ந்து சூர்யா தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரமாக உருவெடுப்பார் என கருப்பு படத்தின் வெற்றியைப் பார்த்து சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. படம் வெளியாகி 2 ஆவது வாரத்திற்கு பின் ரூ 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் காந்தாரா படத்தைப் போல கருப்பு படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் நான்கு மாதங்களில் தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. விஜயின் ஜன நாயகன் படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக இருந்து ரிலீஸ் தடைப்பட்டது. சிவகார்த்திகேயனின் பராசக்தி , தனுஷின் கர ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியது. ராதிகாவின் தாய்க்கிழவி திரைப்படம் ஓரளவிற்கு மக்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்தது என்று சொல்லலாம். ஆனால் விஜய் அஜித் படங்கள் வெளியாகாத வெற்றிடத்தை தமிழ் சினிமாவின் எந்த நடிகர் பிடிக்கப் போகிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது.
இந்த இக்கட்டான நிலையில் தான் சூர்யாவின் கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி வெளியானது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் ரிலீஸூக்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ். ஆர் பிரபு பல கடன் பிரச்சனைகளை கடந்தே கருப்பு படத்தை நம்பிக்கையுடன் வெளியிட்டார். அதற்கேற்ற வகையில் கடந்த இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது கருப்பு. மேலும் திரையரங்கில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றுள்ள கருப்பு படம் ஓடிடியிலும் பெரிய தொகைக்கு விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன.
கருப்பு திரைப்படம் இரண்டாவது வாரத்தில் ரூ200 கோடி வசூலை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கு 100 கோடி பங்கு தொகையாக கிடைக்க வாய்ப்புள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள். கோயம்புத்தூரில் மட்டும் கருப்பு திரைப்படம் 12 கோடி வரை வசூலித்துள்ளது. கோயம்புத்தூரில் அதிகபட்சமாக அஜித் படங்கள் 13 கோடி வரை வசூல் செய்திருக்கின்றன. தற்போது சூர்யாவின் கருப்பு கோயம்புத்தூரில் அஜித் பட வசூலை நெருங்கியுள்ளது. ஒருபக்கம் விஜய் சினிமாவில் இருந்து ரிடையர் ஆகியுள்ளார். இன்னொரு பக்கம் நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். திரையரங்கை நோக்கி மக்களை கூட்டம் கூட்டமாக வரவழைத்த இந்த இரு நடிகர்களின் இடத்தை அடுத்து எந்த நடிகர் பிடிக்கப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஒரு விடிவு நட்சத்திரமாக சூர்யா உருவாகியுள்ளார்.