நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
ஸ்ரீராம் ஆராவமுதன் May 25, 2026 06:44 PM

அமெரிக்காவிற்கும் - ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளது ஈரான். அது, சற்றே நிம்மதி அளிக்கும் விதமாகத் தான் இருக்கிறது. இது குறித்து ஈரான் என்ன கூறியுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் வசூலிக்க மாட்டோம் - ஈரான்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இரு தரப்பு சமரசத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ​​ஹார்முஸ் ஜலசந்தி கடலோர நாடுகளால் நிர்வகிக்கப்படுகிறது என்றும், ஈரான் அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்காது, ஆனால் அது வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் என்றும் அவர் தெளிவாக கூறினார். முன்னதாக, ஒரு அதிகார அமைப்பை நிறுவி, குறிப்பிட்ட இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டங்களை ஈரான் அறிவித்திருந்தது.

கப்பல்கள் மீது சுற்றுச்சூழல் வரி விதிக்கப்படுவதை உறுதி செய்த ஈரானின் வெளியுறவு அமைச்சகம், "இது சுங்க வரி அல்ல, மக்கள் சரியான சொற்களை பயன்படுத்த வேண்டும். ஈரானும் ஓமனும் தற்போது ஒரு புதிய ஒப்பந்தத்தை வரைவு செய்து வருகின்றன. இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், ஹார்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகியவற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடல்சார் சேவைகள் வழங்கப்படும். இதற்கு சுற்றுச்சூழல் வரி வசூலிப்பது அவசியமாகிறது. இது தொடர்பாக ஓமனுடன் விரைவில் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டுவோம் என நம்புகிறோம்," என்று கூறியுள்ளது.

“ஹார்முஸின் பாதுகாப்பு கவலைக்குரிய விஷயமாக உள்ளது“

ஹார்முஸ் குறித்து பேசியுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகும். ஆனால், நாம் நமது சொந்தப் பாதுகாப்பையும் சர்வதேச சமூகத்தின் கவலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஈரானும் ஓமனும் தடையற்ற வர்த்தகத்திற்கும், பாதுகாப்பான போக்குவரத்திற்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த விரும்புகின்றன," என்று கூறியுள்ளார்.

“அணுசக்தி விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை“

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில், அணுசக்தி விவகாரம் தற்போது விவாதிக்கப்படவில்லை என்றும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தப்படுவதாவும் ஈரானிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சிக்கக்கூடும் என்று பாகெய் கவலை தெரிவித்தார். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இன்று முக்கிய செய்திகள் வெளிவரக்கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து, பாகெயின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ரூபியோ சொல்வது என்ன.?

மார்கோ ரூபியோவைப் பொறுத்தவரை, இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறிவிட்டன, ஆனால் இதை ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நேற்று கூறியிருந்தார். அமெரிக்கா, ஈரானுக்கு ஒரு வலுவான முன்மொழிவை முன்வைத்துள்ளதாக ரூபியோ தெரிவித்துள்ளார். அதில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதும் அடங்கும் என அவர் கூறியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.