ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் இளம் வீரர்களை இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வெளுத்து வாங்கியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் மிக பிரம்மாண்டமான தொடக்கத்தைப் பெற்றது. தான் விளையாடிய முதல் 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் நீடித்தது. ஆனால், அதன் பிறகு அந்த அணியின் வெற்றிப் பயணம் தலைகீழாக மாறியது. அடுத்தடுத்து விளையாடிய 6 போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது.
இருப்பினும், ‘வாழ்வா சாவா’ என்ற கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்புக்காகக் காத்திருந்தது. ஆனால், மற்றொரு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்தது. இதனால், கடந்த சீசனில் ரன்னர்-அப்பாக வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த முறை புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்து தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியது.
பஞ்சாப் அணி பிளே-ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியதால் ஆத்திரமடைந்த யுவராஜ் சிங், பஞ்சாப் வீரர்களின் அலட்சியப் போக்கைச் சாடியுள்ளார். சமீபத்தில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ரார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் நடுவிலும், அவருக்கு வலதுபுறம் பிரியான்ஷ் ஆர்யாவும், இடதுபுறம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் அமர்ந்திருந்தனர். அந்தப் படத்திற்கு கீழே பிரியான்ஷை ‘ஸ்லாகர்’ (Slogger) என்றும், அர்ஷ்தீப்பை ‘பிளாகர்’ (Blogger) என்றும் ஜாலியாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவைக் கண்டு கோபமடைந்த யுவராஜ் சிங், “இப்போது நீங்கள் அனைவரும் செருப்படி வாங்கும் நேரம் வந்துவிட்டது என்று மிகக் காரசாரமாகக் கமெண்ட் செய்துள்ளார். தொடரிலிருந்து வெளியேறிய சோகத்தில் இருந்த ரசிகர்களிடையே யுவராஜின் இந்த கமெண்ட் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 38.64 சராசரியுடன் 14 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும், 10.21 என்ற மிக மோசமான எகானமியில் ரன்களை வாரி வழங்கினார்.
குறிப்பாக, இந்த சீசன் முழுவதும் மொத்தம் 18 வைடு (Wide) பந்துகளை வீசி, ஐபிஎல் 2026 தொடரில் அதிக வைடு பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். வீரர்களின் இத்தகைய மோசமான செயல்பாடே யுவராஜ் சிங்கின் இந்த கோபத்திற்குக் காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.