ஹிட் விக்கெட்..! என் வாழ்நாளில் ஒரு நாள் கூட நான் இப்படி அவுட் ஆனதில்ல… சாய் சுதர்சனை வெளுத்து வாங்கிய சேவாக்.. ஒருமுறை செஞ்ச தப்பை மறுபடியும் செய்வதா..?
SeithiSolai Tamil May 30, 2026 10:48 PM

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பல்வேறு விமர்சனங்களைத் தகர்த்து எறிந்து குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திரத் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் அசாத்தியமாக விளையாடி, அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்சு தொப்பி  பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இருப்பினும், பிளே-ஆப் சுற்றின் அடுத்தடுத்த இரண்டு முக்கியமான போட்டிகளில் அவர் ஆட்டமிழந்த விசித்திரமான விதம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியிலும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியிலும் சாய் சுதர்சன் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்தார். குறிப்பாக, ராஜஸ்தான் அணிக்கு எதிராக 58 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தபோது, ஷாட் அடிக்க முயன்று கையில் இருந்து பேட் நழுவி ஸ்டம்பில் பட்டதால் மீண்டும் ஒரே தவறைச் செய்து விமர்சனத்தில் சிக்கினார்.

சாய் சுதர்சனின் இந்தத் தொடர் தவறு குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் தனது பாணியில் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சாய் சுதர்சனுக்கு இனி ‘ஸ்ட்ராடஜிக் டைம்-அவுட்’ நேரத்தின் போது மைதானத்திற்குள் பேட்டில் தடவ பசை கொண்டு வர வேண்டும். கையுறையில் பசையைத் தடவிக்கொண்டால் பேட் அவரது கையை விட்டு நழுவாமல் இருக்கும். ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும், ஆனால் இவர் கற்கவில்லை. எனது நீண்டகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததில்லை என வறுத்தெடுத்தார்.

அதேசமயம், குஜராத் அணியின் ஒட்டுமொத்த கூட்டுமுயற்சியைப் பாராட்டிய சேவாக், டாப் ஆர்டர் பேட்டர்கள் பவர் பிளே ஓவர்களில் பதற்றமின்றி ஆடுவதே அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்றார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா பைனலில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், சாய் சுதர்சன் இத்தவறைத் தவிர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.