விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசு இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது - தபெதிக சாடல்!
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை May 31, 2026 03:14 PM

சீர்காழி: கர்நாடக அரசு மேகதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்தும், இப்பணியைத் தடுத்து நிறுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசு மற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் (தபெதிக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தவெக தலைமையிலான தமிழக அரசையும், அதன் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பையும் தபெதிகவினர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

கடைமடை உரிமையைப் பறிக்கும் மேகதாட்டு அணை

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தபெதிக அமைப்பினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தபெதிக நிர்வாகிகள் தரப்பில் பேசியதாவது;

"கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீர் முழுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நதிநீர் சட்டங்களின்படி, நதியின் கடைமடையில் இருக்கும் விவசாயிகளுக்கே தண்ணீரின் மீது முழு உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமைகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் கர்நாடக அரசு அணை கட்டும் பணியில் பிடிவாதமாக ஈடுபட்டு வருகிறது."

ஒன்றிய பாஜக மற்றும் காங்கிரஸ்க்கு கண்டனம்

தொடர்ந்து பேசிய தபெதிகவினர், "ஒரே நாடு, அனைவரும் இந்துக்கள் என்று மேடைகளில் தேசியம் பேசும் பாஜக ஆளுகின்ற ஒன்றிய மோடி அரசு, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த அணைப் பணியைத் தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.

மறுபுறம், கர்நாடகாவில் தேசியம் பேசும் காங்கிரஸ் அரசு அணை கட்டும் பணியை முன்னின்று நடத்துகிறது. அதே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணியில் பங்கெடுத்துக் கொண்டு, தங்களை விவசாயிகளின் காவலர்கள் போல் காட்டிக் கொள்கிறது. தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ, இங்குள்ள டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றியோ காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதைத்தான் இவர்களின் செயல்பாடு காட்டுகிறது. அணை கட்டும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் முன்வர வேண்டும்" என வலியுறுத்தினர்.

விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு: வன்மையாகச் சாடல்

ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் செயல்பாடுகள் குறித்தும், அதன் தலைவர் விஜய் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

"கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தவெக தலைவர் விஜய் தமிழக மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அப்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மீது பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வோம்' என்று முழங்கினார். தங்களை விடச் சிறப்பாகச் செய்வோம் என்று நம்ப வைத்து வாக்குகளைப் பெற்றார். ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாத கையறு நிலையில் தவெக அரசு உள்ளது" என்று சாடினர்.

"இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கும் அரசு"

மேலும், தவெக அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி ஒரு கண்துடைப்பு என்று குறிப்பிட்ட தபெதிகவினர், "விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது விவசாயிகளுக்கான நிவாரணத்தை வெறும் ஏக்கரைக் கணக்கிடாமல், பணத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக வெறும் 50,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் தவெக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களால், குழந்தையைப் போல ஆசையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு, ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் கடந்தும் இன்னும் எழுந்து நிற்காமல் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அரசு எப்போது எழுந்து நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை" என மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினர்.

உச்ச நீதிமன்றத்தை நாட கோரிக்கை

தமிழக அரசு, கர்நாடகாவின் அணை கட்டும் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வலுவான மற்றும் சட்டப்படியான வழக்குகளைத் தொடுத்து, இடைக்காலத் தடை ஆணை பெற தகுந்த தீவிரமான சட்ட நடவடிக்கைகளை இன்னும் முழு வீச்சில் மேற்கொள்ளவில்லை என்றும், உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு மேகதாட்டு அணையைக் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.