நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் பெருந்தன்மையை கருப்பு படத்தை திரையில் பார்த்தவர்களுக்கு புரியும் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா ஹீரோவாகவும், த்ரிஷா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் ஸ்வாசிகா, ஷிவிதா, நட்டி, இந்திரன்ஸ், யோகிபாபு என பலரும் இப்படத்தில் இடம்பெற்றனர். சாய் அபயங்கரின் இசையில் வெளியான முதல் படமாக உருவான கருப்பு வசூலில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை அப்படம் ரூ.300 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு ஆர்.ஜே.பாலாஜி அளித்த பேட்டியில் கருப்பு படம் பற்றி பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “கருப்பு படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த படத்தை 2019ம் ஆண்டு எல்கேஜி படம் உருவான காலக்கட்டத்திலேயே எடுக்க விரும்பினேன். அதற்கு காரணம் ஒருமுறை என்னிடம் கத்தி முனையில் செயின், மொபைல் போன், பணம் ஆகியவை பறிக்கப்பட்டது. அந்த வழக்கை நான் நீதிமன்றம் மூலம் தீர்க்க முயன்றேன். ஆனால் அந்த வழக்கு நீண்ட காலம் இழுத்தது. கடைசியாக மன உளைச்சலாகி நான் அந்த விஷயத்தை கைவிட்டு விட்டேன். அப்போதெல்லாம் எனக்கு சினிமா பற்றி பெரிதாக தெரியாது. ஆனால் எல்கேஜி படம் எடுக்க தொடங்கியபோது நான் இந்த சம்பவத்தை படமாக எடுக்க முடிவு செய்து கதை எழுதினேன்.
அது அழகான மலையாளப் படத்துக்கான உணர்வை கொடுத்தது. அதன்பிறகு தான் கடவுளே நீதிமன்றத்திற்குச் சென்றால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அதை வைத்து மாஸாக ஒரு கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்கினேன்.
என் திரை வாழ்க்கையில் கருப்பு படம் தான் சிறந்தது என நினைக்கிறேன். கங்குவா சரியாக ஓடாததால் கருப்பு படம் மீது சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆரம்பத்தில் இப்படத்தின் கதையை நான் விஜயிடம் சொன்னேன். ஆனால் கதைக்குள் சூர்யா வந்தவுடன் மாற்றம் செய்யப்பட்டது. அவரின் பெருந்தன்மையால் இப்படம் வெளியானது.
சூர்யாவின் பெருந்தன்மை எந்தளவு என்பதை திரையில் பார்க்க முடியும். இந்திரன் தொடங்கி எங்கள் கதாபாத்திரங்களுக்கு அவர் மிகப்பெரிய இடம் கொடுத்துள்ளார். சூர்யாவைப் பொறுத்தவரை அவருக்கு திரைக்கதை மிகவும் முக்கியம். நான் அவரிடம் கருப்பு படத்தில் நீங்கள் கடவுளாக நடிக்கிறீர்கள். அதற்காக எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும், அதேசமயம் ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும் என்பது இல்லை. ரசிகர்களும் இந்த காட்சியில் நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வேண்டும் என சொன்னேன். அதற்கு சூர்யா மறுப்பேதும் தெரிவிக்காமல் புரிந்துக் கொண்டு ஒப்புக்கொண்டார். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்" எனவும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.