மயிலாடுதுறை: "தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு, தமிழ் இனத்தின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அழகு பார்ப்பது படுஅயோக்கியத்தனம். தமிழ்நாட்டை ஆளுநர் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டாரா?" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது கண்டனத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட இடதுசாரி இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலக்குழு முன்னாள் உறுப்பினருமான தோழர் இரெ.இடும்பையன் (79), வயது மூப்பின் காரணமாக மயிலாடுதுறை அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் காலமானார். எளிமைக்கும் கொள்கை உறுதிக்கும் பெயர் பெற்ற அவரது மறைவுச் செய்தி கேட்டு, டெல்டா மாவட்ட இடதுசாரித் தோழர்களும் பொதுமக்களும் சோகத்தில் மூழ்கினர்.
இடும்பையன் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். மறைந்த இடும்பையன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய வைகோ, நீண்டகால அரசியல் மற்றும் நட்பு ரீதியான நினைவுகளைக் கூர்ந்து, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுது தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இடும்பையன் மறைவு தமிழக இடதுசாரி இயக்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று இரங்கல் தெரிவித்தார்.
அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு வைகோ புறப்பட்டபோது, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழா சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதாவது, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவின் போது, வழமையாக உள்ள வெள்ளை உடைக்கு மாறாக, திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிக்கப்பட்ட பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த காவி உடை பேனரில் உள்ள திருவள்ளுவர் படத்திற்குத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், இது குறித்து வைகோவின் கருத்து கேட்கப்பட்டது.
செய்தியாளரின் கேள்வியைக் கேட்ட உடனே கடும் ஆத்திரமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநரின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையான சொற்களால் சாடினார். அவர் பேசுகையில், "உலகப் பொதுமறை தந்த உலகப் பேரறிஞன், தமிழ் இனத்தின் ஆகச்சிறந்த அடையாளமான அய்யன் திருவள்ளுவருக்குக் காவி உடையை அணிவித்த ஆளுநர் அர்லேகர் செய்தது சாதாரண விஷயமல்ல, அது படு அயோக்கியத்தனம். மதங்களைக் கடந்து, மனிதநேயத்தை உலகிற்குப் போதித்த ஒரு மாபெரும் ஞானியை, ஒரு குறிப்பிட்ட மத வட்டத்திற்குள் சுருக்கப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து மத்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநரின் அதிகாரப் போக்கு குறித்துப் பேசிய வைகோ, "என்ன திமிரும் அகம்பாவமும் இருந்தால், தமிழ்நாட்டிற்குள் வந்து, தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகையிலேயே அமர்ந்துகொண்டு இத்தகைய துரோகத்தைச் செய்வார்கள்? திருவள்ளுவருக்குக் காவி உடையை அணிவிப்பதன் மூலம் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டாரா ஆளுநர்? தமிழ் மண் இத்தகைய ஆதிக்கப் போக்குகளை என்றும் சகித்துக் கொள்ளாது. ஆளுநர் அர்லேகர் செய்த இந்தச் செயல் ஒருபோதும் மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் காவி உடை விவகாரம் ஏற்கனவே சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மயிலாடுதுறையில் வைகோ ஆளுநரை 'அயோக்கியத்தனம், திமிர்' என்று மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசியுள்ளது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்றியுள்ளது.