சிவகங்கை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான பொன்மணி, கட்சியில் இருந்து அதிரடியாக விலகியிருப்பது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய அவர், இன்று தவெக-வில் (தமிழக வெற்றிக் கழகம்) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அல்லது சிவகங்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வில், அமைச்சர் N.ஆனந்த் முன்னிலையில் அவர் தவெக-வில் ஐக்கியமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட தமக்கு சீட் தருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பொன்மணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்கும் நோக்கில் தவெக தலைமை தீவிரமாகக் காய் நகர்த்தி வரும் சூழலில், சிவகங்கையின் முக்கியப் புள்ளியான பொன்மணியின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.