’அதிமுகவை கைப்பற்றும் TTV தினகரன்’ பொதுச்செயலாளர் ?
இராஜா சண்முகசுந்தரம் June 13, 2026 04:14 PM

எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட பேரியக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று செங்கல், செங்கலாக உதிர்ந்துக்கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய நிர்வாகிகளே போர்கொடி தூக்கியும், பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட தொடர்ந்து மறுத்துவருகிறார் அவர். இதனால் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என சாரை, சாரையாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி படையெடுத்து சேர்ந்து வருகின்றனர். கட்சியின் கட்டமைப்பே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், அதைபற்றியெல்லாம் கவலைப்படமால் தன்னுடைய இருப்பை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று குமுறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்

போனால் போகட்டும் மூடில் எடப்பாடி

எடப்பாடிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளான சிவி சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரின் கட்சி பொறுப்புகளையும் அதிரடியாக பறித்தெறிந்தார் எடப்பாடி. அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்த பின்னரும் அவர்களின் கட்சி பொறுப்புகள் திருப்பி அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்று திமுகவில் ஐக்கியமானர். இன்று தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட செயலாளர் பாலகங்கா, முன்னாள் எம்.பி. வனரோஜா என ஒரு டஜன் பேர் சென்று அந்த கட்சியில் இணைந்திருக்கிறார்கள். ஆனால், இப்போதும் ‘போனால் போகட்டும்’ மூடில் ஹாயாக எடப்பாடி இருக்கிறார் என்பதைதான் கட்சி நிர்வாகிகளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

ஒரு தலைவராக தோற்றாரா எடப்பாடி ?

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்கு செல்வதை தடுக்கக் கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் அவசர தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்காததும் அவர் மீதான அதிருப்தியை ஏகத்திற்கும் ஏற்றியிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஒரு தலைவராகவும் இருக்கும் தகுதியை எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

எடப்பாடியை எதிர்த்து பேசத் தொடங்கிய நிர்வாகிகள்

ஆட்சி இருக்கும் வரையில் எடப்பாடி முதலமைச்சர். அதனால் அப்போது அவர் சொல்வதையெல்லாம் எல்லோரும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார்கள். ஆட்சியை இழந்த பின்னரும் அடுத்தடுத்த நடந்த தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. அது முதல் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான கேள்விகள் எழத் தொடங்கின. குறிப்பாக, அவரின் முகத்திற்கு நேராகவே எதிர்த்து பேசும் வழக்கங்கள் எழத் தொடங்கின. அதிமுகவின் ஒரு அமைச்சராக மற்ற அமைச்சர்களோடு பணியாற்றியவர் எடப்பாடி என்பதால், தோல்விகள் தொடரும்போது எல்லோரும் எதிர்த்து பேசத் தொடங்கிவிட்டனர். இதனால் கட்சியின் கட்டுப்பாடே கலகலத்து போகத் தொடங்கியுள்ளது.

ஆனால், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், படுத் தோல்வியை நோக்கிச் சென்றிருந்தாலும் ஒருவர் கூட எதிர்த்து பேச வாயை திறந்திருக்க மாட்டார்கள். அப்படி திறந்திருந்தால் அவர்கள் அரசியலை விட்டே காணாமல் போயிருப்பார்கள். ஆனால், ஜெயலலிதா போன்ற ஆளுமையாக எடப்பாடி பழனிசாமி இல்லாமல் பதவியின் அடிப்படையில் அதிகாரம் செய்ததால் இன்று எல்லோரும் அவருக்கும் அவரது முடிவிற்கும் எதிராக நிற்கிறார்கள்.

கட்சியை காக்க வழி என்ன ? களத்தில் இறங்கிய மூத்தவர்கள்

இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலை அதிமுகவின் அடிமட்ட தொண்டன் வரை எழுந்துவிட்ட நிலையில், அதிமுக என்ற மாபெரும் இயக்கம் இப்படி சில்லு, சில்லாக சிதறிபோவதை தடுக்க வழி என்ன சில மூத்த அதிமுக நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசித்திருக்கின்றனர். அதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அதை நோக்கி கட்சியை நகர்த்த அவர்கள் முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  

டிடிவி தினகரன் கையில் அதிமுக ! பொதுச்செயலாளராகும் தினகரன்

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடமிருந்து மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கியிருக்கிறேன் என்று சொன்ன டிடிவி தினகரனிடம் இப்போது அதிமுக செல்வதற்கான நேரம் கணிந்து வந்திருக்கிறது. தனக்கென தனிச் செல்வாக்கும் எல்லோரையும் நிர்வகிக்கும் தலைமை பண்பும் கொண்ட டிடிவி தினகரனிடம் சென்று பேசவும் அவரை அதிமுகவில் இணைந்து அவரையே அக்கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கவும் சில முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

கட்சியை காக்க வேண்டுமென்றால் கட்டுப்பாடான ஒரு தலைவரின் கையில் கட்சி இருக்க வேண்டும். அவர் சொல்வதை வேத வாக்காக நினைத்து அனைவரையும் கேட்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கும் நிலையில், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை நிர்வகிக்கும் மிகப்பெரிய தலைமை பண்பு இப்போது இருக்கும் எந்த நிர்வாகிக்கும் இல்லாத நிலையிலும் அவர்களும் கட்சியை கட்டுப்பாட்டில் எடுத்து நடத்தும் வல்லமை இருப்பதாக நினைக்காத சூழலிலும், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியை நடத்திய டிடிவி தினகரன் வசமே அதிமுகவை ஒப்படைத்து கட்சியை காக்க வேண்டும் என்ற குரல்கள் விரைவில் அதிமுகவில் எழுவிருக்கின்றன.  

எல்லோரை விடவும் சரியானவர் தினகரன் – சீனியர்கள் கருத்து

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சீனியர்கள் சிலரிடம் பேசியபோது. ‘எல்லோரைவிடவும் ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்தவர் டிடிவி தினகரன். அவரிடம்தான் இன்று இருக்கும் பல நிர்வாகிகள் பதவிகளை பெற அவரது வீட்டு வாசலில் நின்றார்கள். அப்படி இயக்கத்தின் கட்டமைப்பும், நிர்வாகமும் தெரிந்த டிடிவி தினகரன் வசம் கட்சியை ஒப்படைப்பதே காற்றில் கரையும் கற்பூரமாக இருக்கும் அதிமுகவை காக்கும் ஒரே வழி’ என்றார்கள்.

ஆனால், முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி, பொறுப்பு சுகங்களை அனுபவித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியை காக்க இவற்றையெல்லாம் விட்டுத் தருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் நிலையில், அவர் விட்டுத் தரவில்லையென்றால் சசிகலாவிடமிருந்து அவர் பொதுச்செயலாளர் பதவியை எடுத்துக் கொண்டது மாதிரி, மீண்டும் நடைபெறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.