’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
வசந்த் June 13, 2026 05:44 PM

இன்று சென்னை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, துரைமுருகன் வருவதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாமதமாக வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை வரவேற்க மகளிர் அணியினர் உட்பட யாருமே வெளியே வராத நிலையில், கட்சி நிகழ்ச்சிக்கு உள்ளே செல்லாமல், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்த நிலையில், சோகமான முகத்துடன் துரைமுருகன் திரும்பிச் சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

புறக்கணிக்கப்படுகிறாரா துரைமுருகன் ?

கட்சித் தோல்விக்கு பின்னர் திமுகவை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவின் முக்கிய பொறுப்புகளை எடுத்து அதை அறிவிக்கும் முக்கிய பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனுக்கு பதில் வேறு ஒருவரை கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்னர் துரைமுருகனை பதவி விலக வேண்டும் என்று கட்சியின் முக்கிய தலைகள் சிலர் நிர்பந்தித்ததாக தகவல் வெளியான நிலையில், இப்போது அந்த திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக கட்சியிலும் பொறுப்பிலும் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில், துரைமுருகன் இருந்தாலும் அவர் தானாக முன்வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்ய இதுவரை முன்வரவில்லை. இதனால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மகளிர் அணி நிகழ்ச்சிக்கு செல்லாத துரைமுருகன்

இந்நிலையில்தான் இன்று அறிவாலயத்தில் நடைபெற்ற மகளிர் அணி நிகழ்ச்சி கட்சியின் பொதுச்செயலாளர் வருகைக்கு முன்னரே தொடங்கியது. கனிமொழி பேசி முடித்தவுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த துரைமுருகனை யாரும் வரவேற்று நிகழ்ச்சிக்கு கட்சியின் விதிமுறைபடி அழைத்து செல்லாத நிலையில், அவர் வருத்தத்துடன் அங்கிருந்து வெளியேறிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜினாமா செய்கிறாரா துரைமுருகன்

இதனையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்யும் முடிவுக்கு துரைமுருகன் வந்திருப்பதாகவும் அது குறித்து நீண்ட அறிக்கை எழுதி ஊடகங்களுக்கு வெளியிட்ட பின்னர் தன்னுடைய முடிவை அறிவிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அறிவாலயம் தரப்பு சொல்வது என்ன ?

இந்த விவகாரம் குறித்து அறிவாலய அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, ”உடல்நிலை சரியில்லாத நிலையிலும் துரைமுருகன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் தனக்கு தொற்று ஏற்பட்டு, உடல்நிலை மோசமாகிவிடும் என்பதால் மட்டுமே அவர் திரும்பி சென்றார் என்றும், அவர் வருத்தப்பட்டோ அல்லது அவமானம் செய்யப்பட்டோ அனுப்பப்பட்டதாக சொல்வதெல்லாம் பொய்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.