பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
ராஜேஷ். எஸ் June 15, 2026 03:44 PM

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாயிற்கு விற்ற தாய் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு  உமராபாத் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியை சேர்ந்த ஜபினா என்பவர், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் நிலையில், இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண்  குழந்தை உள்ள நிலையில், மீண்டும் ஜபினாவிற்கு கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ஜபினா தனது குழந்தையை திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த ரஷீத் என்பவருடன் சேர்ந்து, வேலூரை சேர்ந்த இடைத்தரகரான புகேழந்தி மற்றும்  ஈரோட்டை சேர்ந்த உமாதேவி ஆகியோர் மூலம் நாமக்கல் மாவட்டம் , குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் ஹர்மி என்ற தம்பதியினருக்கு, குழந்தை இல்லாததால், அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளனர்.

பின்னர் ஜபினா மனமாறி ரஷித்திடம் சென்று, தனது குழந்தையை திருப்பி தரும்படி கூறியுள்ளார். ஆனால் ரஷித் குழந்தையை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அறிந்த, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர், உமராபாத் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து  புகார் அளித்துள்ளார்.

Also Read| 3 வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு யார் காரணம்? - கொதிப்புடன் சொன்ன அன்புமணி

அதனை தொடர்ந்து,  புகாரின் பேரில் ரஷித், புகழ், உமா  மற்றும் குழந்தையை விற்ற குற்றத்திற்காக ஜபினாவையும், குழந்தையை வாங்கிய குற்றத்திற்காக, சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஹர்மி ஆகிய 6 பேரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு, 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயே குழந்தையை விற்ற சம்பவத்தில் 6 பேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.