அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே. விஜயபாஸ்கர் அவர்கள், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அரசியல் பதிவு தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல என்று அவர் தனது பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக்கு எதிராக அவர் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.bமேலும் தனது பதிவில், வரலாறு எப்போதும் எத்தனை பேரை கட்சியை விட்டு நீக்கினோம் என்பதை நினைவில் வைத்திருப்பதில்லை என்றும், மாறாக எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான் நினைவில் வைத்திருக்கும் என்றும் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியில் சமீபகாலமாக நடந்து வரும் சில அதிரடி நீக்கங்கள் மற்றும் உட்கட்சி விவகாரங்களை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் இவரின் இந்த அதிரடிப் பதிவு, அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.