கருப்பு ரிலீஸூக்கு உதவ முன்வராத லோகேஷ் கனகராஜ்...வெளிப்படையாக பேசிய திருப்பூர் சுப்ரமணியம்
ராகேஷ் தாரா June 15, 2026 04:44 PM

லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரித்து அவருக்கு அடையாளம் கொடுத்தது. இரண்டாவது படமான கைதி படத்திற்கு 4 முதல் 5 மடங்கு சம்பளம் வழங்கியது. ஆனால் ட்ரீம் வாரியஸ் தயாரிப்பு நிறுவனம் கருப்பு படத்தின் போது கடன் பிரச்சனையை எதிர்கொண்டபோது லோகேஷ் கனகராஜ் எந்த விதமான உதவியையும் செய்யவில்லை என திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு வைத்துள்ளார் .

வெறுத்துப்போன சூர்யா

சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய திருப்பூர் சுப்ரமணியம் கருப்பு படம் வெளியாவதற்கு யார் யார் உதவினார்கள் என்பது குறித்து பேசினார். அப்போது " கருப்பு படத்தின்  பைனான்சியர்களில் நானும் ஒருவன். படத்தின் நிதி நெருக்கடியின்போது சூர்யா முன்னின்று உதவினார். ஆனால் கடன்  அதிகமாக இருந்ததால் அவர் மிகவும் மனமுடைந்து, "என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும்; இதற்கு மேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார். உண்மையில் எஸ் ஆர் பிரபு  மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் தான் பணத்தைக் கடனாகப் பெற்றிருந்தனர் ஆனால் நானும் அருள்பதி சாரும் நாங்களே கடனைப் பெற்றவர்களைப் போல அன்புச்செழியன், அழகர்  போன்றவர்களிடம் கடனாளிகளைப் போல் நின்று  பேசி, அவர்கள் கேட்ட தொகையைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டோம். 

படத்தின் நிதிச் சிக்கலைத் தீர்ப்பதில் அருள்பதி சார் முக்கிய பங்காற்றினார். படத்துடன் எந்த நேரடித் தொடர்பும் இல்லாத நிலையிலும், அவர் இரண்டு நாட்கள் தூங்காமல் உழைத்தார். நானும்  ஆர் பி செளத்ரி சாரும் எங்கள் சார்பில் முடிந்த உதவிகளை செய்தோம். எங்கள் தொகையில் 50%-ஐக் குறைக்குமாறு அருள்பதி கேட்டார். ஆனால் நாங்கள் 70 ஆக குறைத்துக்கொண்டு 30% மட்டுமே பெற்றுக்கொண்டோம், மீதியை அடுத்த படத்தில் சரிசெய்துகொள்ளலாம் என்று கூறினோம்.

சஞ்சய் மற்றும் ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோரும் பெரும் ஆதரவை அளித்தனர். ஆனாலும், கடைசி நேரத்தில் ₹5 கோடி பற்றாக்குறை இருந்தது. நான் ₹1 கோடி தருவதாகச் சொன்னேன்; எஸ் ஆர்  பிரபுவிடம், அவர் அறிமுகப்படுத்திய பிரபலமான இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை அணுகுமாறு கூறினேன். பலரிடம் கேட்டும் யாரும் பணம் தரவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். மீதமுள்ள ₹5 கோடியைச் சமாளிக்க, என்னால் ₹1 கோடி மட்டுமே தர முடியும் என்றும், ஏற்கனவே என்னிடம் அவருக்கு நிறைய பாக்கித் தொகை இருப்பதால் அதற்கு மேல் தர முடியாது என்றும் கூறினேன். கடைசி நேரத்தில், Suriya-வின் தரப்பிலிருந்து மீதமுள்ள பணத்தைத் தருவதாக ராஜசேகர் பாண்டியன் கூறினார்.

உதவி செய்யாத லோகேஷ் கனகராஜ் 

படத்தை வெளியிடுவதில் ஃபைனான்சியர்கள் பங்கு மிகப்பெரியதாக இருந்தது. அவர்கள் அனைவரும் முழுப் பணத்தையும் கேட்டிருந்தால், இப்படம் மற்றொரு துருவ நட்சத்திரமாக மாறியிருக்கும். அடுத்த நாள் அவர்கள் ஃபைனான்சியர்களுக்கு , குறிப்பாக அருள்பதிக்கும் நன்றி தெரிவித்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் கதாநாயகன், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கே நன்றி தெரிவித்தனர்.

லோகேஷ் கனகராஜ் அவர்களுடன்  மாநகரம் படத்தை இயக்கினார். அடுத்த படமான கைதிக்கு  அவருக்கு 4 முதல் 5 மடங்கு சம்பள உயர்வு அளித்தனர். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் அடுத்த படத்தையும் அவர்களுடனேயே செய்திருக்க வேண்டும்; ஆனால் பெரிய கதாநாயகர்கள் வந்தபோது, ​​அவர் அதிக சம்பளம் கிடைக்கும் வாய்ப்பை நாடிச் சென்றுவிட்டார். அவருக்கு எந்த அடையாளமும் இல்லாதபோது அவர்கள் தான் அவருக்கு அந்த அறிமுகத்தை அளித்தனர்; அவர் குறைந்தபட்சம் அவர்களுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும். இனிமேல் தயாரிப்பாளர்கள் புதியவர்களை அறிமுகப்படுத்தினால், அவர்களுடன் 5 ஆண்டு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்." என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார் 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.