இந்தி தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி தொடர் கும்கும் பாக்யாவில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட சஞ்சிதா உகாலே, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாரா பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு 22 வயதாகும்.
தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆரம்பகட்ட தகவல்களில் இது தற்கொலை என கூறப்பட்டாலும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள் இது கொலை என்பதற்கான எந்த வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்கள். தனது மகளின் இறப்பில் எந்த வித சந்தேகமும் இல்லை என சஞ்சிதாவின் தந்தை தெரிவித்துள்ளார். சஞ்சிதாவின் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சஞ்சிதா உகாலே, கும்கும் பாக்யா மட்டுமின்றி வாக்லே கி துனியா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், சாவா (Chhaava) உள்ளிட்ட திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். அவரது திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சிதா உகாலேவின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சஞ்சிதா இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். பிரபல பாடல் ஒன்றை பாடி சஞ்சிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த சஞ்சிதா இந்த விபரீதமான முடிவை எடுக்க என்ன காரணம் என ரசிகர்கள் இந்த பதிவில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram