சமந்தா நடித்துள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. குஷி படத்தைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் கழித்து சமந்தாவின் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நீண்ட ஓய்விற்கு பின் திரும்பி வரும் சமந்தா கடந்த 3 ஆண்டுகளில் தனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். தனக்கு கிடைத்த புகழ் மற்றும் அங்கீகாரத்திற்கு நான் அடிமையாகிவிட்டதாக இந்த காலத்தில் தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்
த நாட் இதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய சமந்தா இப்படி கூறினார் "முன்பெல்லாம், நான் இந்த போட்டியில் ஓட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது, உண்மையில் அப்படி எந்தப் பந்தயமும் இல்லை என்று. பந்தயம், போட்டி, யாரையாவது முந்த வேண்டும் என்ற எண்ணம், மற்றும் ஒரு பினிஷ் லைன் ஆகியவை வெறும் மாயத்தோற்றங்கள் மட்டுமே. இப்போது நான் என் வேலையை மிகவும் தூய மனநிலையுடன் அணுகுகிறேன். எனக்கு முன்னால் எந்த பினிஷ் லைனும் இல்லை.
சினிமாவில், ஒரு காட்சியையோ அல்லது ஷாட்டையோ (shot) முடித்த பிறகு, நான் அந்தப் பாத்திரத்தின் உலகத்திற்குள் முழுமையாகச் சென்றுவிடுவேன். அதனால்தான் சினிமா ஒரு போதை போல ஈர்க்கிறது; எவ்வளவு ஆழமான சிக்கலில் நான் மாட்டிக்கொண்டாலும், மீண்டும் மீண்டும் சினிமாவுக்கே திரும்புகிறேன். ஏனெனில், சினிமா எப்போதும் என் முதல் காதல் .
பல்லாவரத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால், நான் பெருமைப்படாத பல படங்களிலும் நடித்தேன். மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள், என் படங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது எனக்கு ஒரு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த நட்சத்திர அந்தஸ்து தரும் விளையாட்டுக்கும், அதனுடன் கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் நான் அடிமையானேன். தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் அமைந்தன; எனக்காக உருவாக்கப்பட்ட அந்த உலகத்தை நான் நம்பினேன், அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத் திறமை இருக்கிறதா, நான் முன்னேறியிருக்கிறேனா அல்லது அந்தப் படத்திற்கு நான் என்ன பங்களிப்பைச் செய்கிறேன் என்று ஒருமுறை கூட நான் என்னையே கேட்டுக்கொள்ளவில்லை. சமீபத்தில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளியின்போது, ஒரு முடிவை நான் கண்டேன். நடிப்பிற்கு மீண்டும் திரும்ப வேண்டியிருந்தபோது, பல நடைமுறைகளை மாற்ற விரும்பினேன். திரும்பிய பிறகு, நான் பல மாற்றங்களைச் செய்தேன்.
'ட்ரலலாலா புரொடக்ஷன்ஸ்' (Tralalala Productions) அந்தச் சுழற்சியை உடைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். பெண்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்து, பெண்கள் இன்னும் சிறப்பான அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் என்று நான் கருதினால், அதற்காக எனது சொந்தப் பணத்தை முதலீடு செய்து நான் ஆதரவளிக்க வேண்டும். இது அந்த திசையிலான ஒரு முன்னெடுப்புதான்." என்று சமந்தா கூறியுள்ளார்