சேலம்: பணப் பிரச்சனை உள்ள பெண்ணுக்கு உதவி செய்து அவர்களிடம் நெருக்கமாக பழகி வீடியோ எடுத்து மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சேலத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொடர்பாக பேசிய வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், நெய்க்காரப்பட்டி அருகே புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி, சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த ஆடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பின்னர் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த பெண் சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவர் இருந்த நிலையில் இரு குழந்தைகள் உள்ளதாகவும் அவருக்கு கடன் பிரச்சனை ஏற்படவே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்படி நெருங்கி பழகியதை மணிகண்டன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார். அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டனின் செல்போனை எதேர்ச்சையாக எடுத்துப் பார்த்தார். அப்போது ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் தன்னுடைய வீடியோவும் இருப்பதை பார்த்து திடுக்கிட்டு அந்த வீடியோக்களை அழித்துவிட்டு அங்கிருந்து மணிகண்டனிடம் சொல்லாமல் கிளம்பி விட்டார். பின்னர் மணிகண்டன் மொபைல் போனில் அழைத்த போது அந்தப் பெண் பேச மறுத்துள்ளார்.
மேலும், அந்தப் பெண் பேசிய ஆடியோவில் பணப் பிரச்சினை உள்ள பெண்களாக பார்த்து அவர்களுக்கு உதவுவது போல அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதை மணிகண்டன் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் விபச்சாரத்திற்கும் ஈடுபடுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்து அந்த வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்துள்ளதாகவும் மணிகண்டன் வீட்டு அருகே மளிகை கடை நடத்தி வருவதாகவும் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ் புகையிலைப் பொருட்களை விற்றதால் ஏற்கனவே அம்மாபேட்டை கொண்டலாம்பட்டி அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மணிகண்டனை விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெண்களின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் தவெக நிர்வாகி இல்லை என்று சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலம் தெற்கு மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த எம்.மணிகண்டன் என்பவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார் என்கிற செய்தி சமூகவலைதளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது. மணிகண்டன் என்ற நபருக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.