அண்மையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆன்லைன் இணையதளத்தில் (OSM) ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு குளறுபடிகள் தொழில்நுட்பக் கோளாறு அல்ல, அது முற்றிலும் மனிதத் தவறுதான் என மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனமான கோயம்ப்ட் (Coempt) தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டில் மிகப் பெரிய பிழைகள் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘கோயம்ப்ட் எஜு டெக் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், தங்களது இணையதளத்தின் பாதுகாப்பிலோ அல்லது மென்பொருளின் செயல்பாட்டிலோ எவ்விதமான குறைபாடுகளும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களில் காணப்படும் மதிப்பீட்டுப் பிழைகள் அனைத்தும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் கவனக் குறைவால் ஏற்பட்ட மனிதத் தவறுகளே தவிர, அது கணினி அல்லது ஏஐயின் தோல்வி கிடையாது என அந்நிறுவனம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
விடைத்தாள்களைக் கணினித் திரையில் திருத்தும்போது குறிப்பிட்ட சில பக்கங்களுக்கு மதிப்பெண் வழங்காமல் அப்படியே விடுவது, மதிப்பெண்களைக் கூட்டும்போது ஏற்படும் தற்செயலான பிழைகள் அல்லது திருத்தப்பட்ட தரவுகளைச் சரியாகச் சேமிக்காமல் விடுவது போன்றவை நேரடியாக மதிப்பீட்டாளர்கள் செய்யும் தவறுகளாகும். இதற்கு எங்களது மென்பொருள் அமைப்பு எவ்விதத்திலும் பொறுப்பாகாது.
எங்களுடைய மதிப்பீட்டுத் தளம் மிகவும் பாதுகாப்பானதாகவும், எப்போதுமே துல்லியமாகச் செயல்படும் வகையிலுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கோயம்ப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமைப்பு ரீதியான தோல்வி அல்லது இணையதள ஊடுருவல் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. தரவுகள் கசிந்ததாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. ஒவ்வொரு மதிப்பீட்டாளருக்கும் தனித்தனி ரகசிய உள்நுழைவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதை அவர்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். மென்பொருளில் உள்ள தானியங்கி சரிபார்ப்பு வசதிகள் தற்போதும் சரியாகவே இயங்குகின்றன. அந்த அமைப்பை மதிப்பீட்டாளர்கள் முறையாகப் பயன்படுத்தத் தவறும்போதுதான் இதுபோன்ற சிறு பிழைகள் தற்செயலாக ஏற்படுகின்றன என விளக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் ’’இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தேவையற்ற வதந்திகளை மாணவர்கள் இனி நம்ப வேண்டாம். தேர்வு நடத்தும் நிறுவனத்தின் முறையான வழிகாட்டுதலின்படி, விடைத்தாள் மதிப்பீட்டு செயல்முறை முழுவதும் மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன்தான் தொடர்ந்து நடைபெறுகிறது. சிறிய மனிதத் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாகச் சரிசெய்வதற்கான சிறப்பான தொழில்நுட்ப வழிமுறைகளும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன.
எனவே, ஒட்டுமொத்த மென்பொருள் அமைப்பின் மீது தேவையில்லாமல் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சந்தையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள கோயம்ப்ட, இந்தியா முழுவதும் 35 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருவதாகவும் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி விடைத் தாள்களை கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.