தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், மண்டேபள்ளியின் புறநகர்ப் பகுதியான கே.சி.ஆர் நகர் காலனியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த காலனி பகுதிக்கு தள்ளுவண்டியில் வந்த பானிபூரியை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆசையாக வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பானிபூரி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் 18 குழந்தைகளுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பதறிப்போன அவர்களது குடும்பத்தினர், நள்ளிரவு என்றும் பாராமல் குழந்தைகளை அலறியடித்துக் கொண்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மேலும் சிலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெரியவர்கள் உட்பட பானிபூரி சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. தற்போது, 12 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட தள்ளுவண்டி கடைக்காரர் குறித்தும், பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் தரம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.