காதலுக்கு மறுத்த பெற்றோர், தங்கை படுகொலை.. தப்பியோடிய மூத்த மகள், காதலனுக்கு வலைவீச்சு!
Dinamaalai June 24, 2026 11:48 AM

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், தங்கையைக் கொலை செய்துவிட்டு, காதலனுடன் தப்பியோடிய மூத்த மகளைப் போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு கஸ்தூரி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள அந்த வீட்டின் மூத்த மகள் மற்றும் அவரது காதலனைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெங்களூரு கஸ்தூரி நகரைச் சேர்ந்த சோமசுந்தர், இவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் இவர்களது இளைய மகள் சுப்ரியா ஆகிய மூவரும் அவர்களது வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளனர். இவர்களது உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலையாளிகள் மிகவும் திட்டமிட்டு, அடுத்தடுத்து இந்த மூன்று கொலைகளையும் அரங்கேற்றியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்த போலீசாருக்கு, சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவர் மீதும் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த நேரத்திலிருந்து அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்கள் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.

இக்கொடூர கொலைச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் பெங்களூரு போலீஸார் இரண்டு முக்கியக் கோணங்களில் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகிய இருவரின் காதலுக்கு தந்தை சோமசுந்தர் மற்றும் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் பெற்றோரை வழியிலிருந்து அகற்ற இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

மற்றொரு கோணமாக, மூத்த மகள் ஸ்வேதாவிற்குச் சுமார் ரூ.30 லட்சம் வரை கடன் இருந்ததாகத் தெரிகிறது. இந்தக் கடன் பிரச்சினையைத் தீர்க்கப் பெற்றோரிடம் பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில், காதலனுடன் சேர்ந்து பெற்றோரையும் தங்கையையும் ஸ்வேதா கொலை செய்தாரா என்ற அடிப்படையிலும் போலீஸார் தீவிரமாகத் துப்பு துலக்கி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள ஸ்வேதா மற்றும் கென்னத் பிடிபட்டால் மட்டுமே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் வெளிவரும் என்பதால், தனிப்படை போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.