தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 41 நாட்களேயான நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தீவிரக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக ஆதரவாளரும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி, தவெக அரசின் ஆட்சியை உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிட்டுக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மழை, வெயில் என எதையும் பார்க்காமல் கொள்கைக்காகவும் மக்களுக்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜூலி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பின்வரும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் வரை நடக்கும் அவலம் நீடிக்கிறது. தற்போதைய ஆட்சியில் 3 வயதுக் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்த தற்போதைய ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் இப்போது எங்கே போனார்கள்?
தொடர்ந்து பேசிய ஜூலி, முதலமைச்சர் விஜய்யை நோக்கி, “விஜய் அண்ணா, சமூக வலைத்தளங்களில் உங்களை எதிர்க்கும் பெண்களை நோக்கி உங்களது ஆதரவாளர்கள் ஆபாச சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு எதிராக இப்படி ஆபாச வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று உங்கள் ஆதரவாளர்களிடம் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். எங்களுக்குக் காசு, பணம், தங்கம் எதுவும் வேண்டாம்; தமிழ்நாட்டில் பெண்கள் நிம்மதியாக நடமாட உயிர் பாதுகாப்பு மட்டுமே வேண்டும்.”

திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை டெண்டர் ஒன்று வெறும் 6 மணி நேரத்திற்குள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் எப்படி ஊழல் இல்லாமல் இருக்க முடியும்? வெறும் 48 மணி நேரத்திற்குள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்க அப்ரூவல் வழங்கப்படுவதைக் "குஜராத் மாடல்" ஆட்சி எனத் தவெகவினர் ட்விட்டரில் பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்கள்.
இது தமிழ்நாடா அல்லது உத்தரப்பிரதேசமா என்று கேள்வி எழுப்பிய ஜூலி, தற்போதைய அரசின் நிர்வாக வேகம் சாமானியர்களுக்கானது அல்ல என்று கூறித் தனது உரையை முடித்தார். திமுகவின் இந்தத் தொடர் போராட்டங்களால் தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.