கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம், கெரூரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களில், 14 வயது சிறுவன் ஒருவன் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக அந்த வழியாகச் சென்ற ரேணுகா என்ற பெண் மீது பட்டுள்ளது. இதனால் கடுமையான ஆத்திரமடைந்த ரேணுகா, உடனடியாக இதுகுறித்துத் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பள்ளி மைதானத்திற்குத் தனது உறவினர்களான பசவராஜ் மற்றும் அபி ஆகிய இருவரையும் அவர் அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் பந்தை அடித்த 14 வயது சிறுவனையும், அங்கிருந்த மற்றொரு சிறுவனையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துள்ளனர். பின்னர், பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு ஜன்னல் அருகே அச்சிறுவர்களை நிறுத்தி, அவர்களின் கைகளைக் கயிற்றால் இறுக்கமாகக் கட்டி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ரேணுகா, பசவராஜ் மற்றும் அபி ஆகிய மூவரும் சிறுவர்கள் என்றும் பாராமல், தங்களின் கைகளாலும், செருப்பாலும் அச்சிறுவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். வலியால் அச்சிறுவர்கள் கதறி அழுத பிறகும், அவர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். இக்கொடூரமான சம்பவத்தைக் கண்ட அந்த கிராம மக்கள் உடனடியாகத் தலையிட்டு, சிறுவர்களைக் கயிறுகளில் இருந்து மீட்டு அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தங்களுக்கு நேர்ந்த இக்கொடூரச் செயலைச் சிறுவர்கள் பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ககாவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் ரேணுகா, பசவராஜ் மற்றும் அபி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்கு அஞ்சி இ மூவரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.