அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டத்தை செனட் உறுப்பினர்கள் நிறைவேற்றியதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செனட் சபையை கடுமையாக விமர்சித்தார். டெஹ்ரான் ஏற்கனவே அழுத்தத்தில் இருப்பதாகவும், குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், ஈரானில் அமெரிக்காவின் கூடுதல் ராணுவத் தலையீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செனட் சபை போர் அதிகாரத் தீர்மானத்தை 50 க்கு 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை, இதுவரை ட்ரம்ப் இந்த மோதலை கையாண்ட விதத்திற்கு எதிராக காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட மிக வலுவான சவால்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த வாக்கெடுப்புக்கு பதிலளித்த ட்ரம்ப், ஈரான் பலவீனமான நிலையில் இருப்பதாக கூறியதோடு, ஒரு முக்கியமான தருணத்தில் செனட்டின் இந்த நடவடிக்கை தனது நிர்வாகத்தின் முயற்சிகளை பாதித்துவிட்டதாகவும் கூறினார்.
ட்ரம்ப் தனது பதிவு ஒன்றில், டெஹ்ரான் பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "ஆக, நான் ஈரானை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். அது வீழ்ச்சியடைய தயாராக உள்ளது. நமக்கு எதையும் கொடுக்கவும் மனமுவந்திருக்கிறது. மேலும், பல பத்தாண்டுகளில் முதன்முறையாக, அமெரிக்காவையும் அதன் அதிபரான என்னையும் முழு மனதுடன் மதிக்கிறது," என்று அவர் கூறியிருந்தார்.
அமெரிக்காவிற்கு சாதகமான நிலை இருப்பதாக தாம் கூறியபோதிலும், ஈரானை கையாள்வதற்கான தற்போதைய முயற்சிகளை செனட் வாக்கெடுப்பு சிக்கலாக்கியுள்ளது என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
தீர்மானத்தை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்துகொண்ட குடியரசுக் கட்சி செனட்டர்கள் மீது ட்ரம்ப் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் அந்த சட்டமன்ற உறுப்பினர்களை “குடியரசுக் கட்சித் தோல்வியாளர்கள்” என்று குறிப்பிட்டதோடு, தனது நிர்வாகம் அதன் நோக்கங்களை அடைவதை அவர்கள் மேலும் கடினமாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
"இந்த செனட்டர்கள் என் வேலையை இன்னும் கடினமாக்கிவிட்டார்கள். ஆனாலும் நான் எப்படியாவது அதை செய்து முடிப்பேன். ஏனென்றால், நான் எப்போதுமே எதையும் செய்து முடிப்பவன்!" என்று ட்ரம்ப் கூறினார்.
இந்த சட்டம், பிரதிநிதிகள் சபையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இது ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கை குறித்து சட்டமியற்றுபவர்களிடையே அதிகரித்து வரும் கவலையை உணர்த்துகிறது.
செனட் வாக்கெடுப்பு குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் பிளவுகளையும் வெளிப்படுத்தியது. பல குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டு, ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து அந்த நடவடிக்கையை ஆதரித்தனர்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானுடனான மோதல், வாஷிங்டனில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நீடித்த ராணுவ நடவடிக்கையின் செலவுகள் மற்றும் விளைவுகள் குறித்து சட்டமியற்றுபவர்கள் விவாதித்து வருவதால் இந்த சர்ச்சை வலுப்பெற்றுள்ளது.