உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையின் போது ஜெனரேட்டர் பேக்அப் வராததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து அங்கிருந்த மெயின்டனன்ஸ் ஊழியரை ஓட ஓட விரட்டித் தாக்கிய அதிரடிச் சம்பவம் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் செம வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா செக்டர் 74-ல் உள்ள ‘சூப்பர்டெக் கேப் டவுன்’ (Supertech Cape Town) குடியிருப்பில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததோடு, அங்கிருந்த அவசரக்கால ஜெனரேட்டர் வசதியும் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த ஜோதி மிஸ்ரா என்ற பெண், தனது நண்பர் அமித் என்பவருடன் சேர்ந்து அங்கிருந்த பராமரிப்பு அலுவலகத்திற்கு (Maintenance Office) நியாயம் கேட்கச் சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த கமல் என்ற ஊழியரிடம் இவர்கள் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அது திடீரென அடிதடியாக மாறியுள்ளது. அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ள இந்த வைரல் வீடியோவில், நண்பன் அமித் அந்த ஊழியரை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஜோதி மிஸ்ரா, ஊழியரின் தலை மற்றும் தோள்பட்டைகளில் சரமாரியாகக் கைகளால் அடித்துத் துவம்சம் செய்கிறார்;
அந்த ஊழியர் மொத்தம் 23 முறை சப்பென்று கன்னத்தில் அறையப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து செக்டர் 113 காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி போலீஸ் கமிஷனர் ராகேஷ் பிரதாப் சிங் தலைமையிலான தனிப்படையினர், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் ஜோதி மிஸ்ரா மற்றும் அவரது நண்பர் அமித் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அடிதடியில் இறங்காமல் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ள நிலையில், இந்த நள்ளிரவு 23 ஸ்லாப் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.