ரசிகர் மன்றம் முதல் அரசியல் கட்சி வரை நாங்கள் செய்த பணிகள்...சட்டப்பேரவையில் விஜய் போட்ட லாங் லிஸ்ட்
ராகேஷ் தாரா June 24, 2026 08:14 PM

முதல்வர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் எந்த வித சமூக செயல்பாட்டிலும் ஈடுபட்டதில்லை என அவர் மீது பொதுவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று ஜூன் 23 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வரின் உரையின் தொடக்கம் அமைந்தது. சட்டப்பேரவையில் பேசிய விஜய் ரசிகர் மன்றம் தொடங்கியது முதல் அரசியல் கட்சி தொடங்கியது வரை தான் செய்த செயற்பாடுகள் குறித்து பட்டியலிட்டார்.

அவர் பேசுகையில் " தாய் அன்போடு  அள்ளி அரவணைத்துக்கொண்ட  தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் எப்படியெல்லாம் துணையாக இருந்தோம், எப்படியெல்லாம் மக்களோட மக்களாக இருந்தோம் என்பதை சொல்கிறேன்" என்ற விஜய் 1990 கள் முதல் 2024 ஆம் ஆண்டு கட்சித் தொடங்கியது வரை தனது பெயரில் செய்யப்பட்ட செயல்பாடுகளை பட்டியலிட்டார். 

  • 1990 களிலேயே ரசிகர் மன்றமா இருந்தபோது மக்களுக்கு துணையா நிற்க ஆரம்பித்தோம். அதன் பிறகு நற்பணி மன்றமாகவும், அதன் பிறகு விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி, மக்களோட மக்களாக  நின்றோம்.
  • 2008இல் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வரணும், நம்ம தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பான, நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றைக்கே கோரிக்கை வைத்தோம்.
  • 2009இல் ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கம் வழியாக நம்மளோட மக்கள் நல பணிகளை விரிவு செய்து வந்தோம் . கல்விக்கு துணையாக இருந்தோம், சோசியல் சர்வீஸ் செய்தோம், வெள்ள நிவாரணத்தில் துணையாக இருந்தோம், கொரோனா காலத்தில மக்களுக்கு தோல் கொடுத்தோம். விலையில்லா விருந்தகம், குருதியகம், முட்டை பால் ரொட்டி திட்டம், விழியகம், பயிலகம், நூலகம், இப்படி பல வழிகளில் மக்களுக்கு துணையாக இருந்தோம்.
  • நம்மளுடைய திரைப்படங்களில் நம்மளால் முடிந்த வரைக்கும் ஊழல் எதிர்ப்பை சொன்னோம், சமூக நீதியை சொன்னோம், கல்வியை பற்றி சொன்னோம், அரசியலை பற்றி சொன்னோம். அரசியலை பற்றி பேசுனதுனால நம்ம படங்கள் சந்திச்ச, ஏன் இதுவரைக்கும் சந்திக்கிற பிரச்சனையை பற்றி எல்லாருக்குமே தெரிஞ்சதுதான்.
  • இது மட்டுமில்லாமல் 2011ல் நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சனைகளுக்கு ஆதரவா ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்துனோம். மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டிச்சு பேசி அதில் நம்மளோட எதிர்ப்பை பதிவு செஞ்சோம்.
  • 2017இல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர் பண்பாட்டு உரிமைக்கான நம்மளோட ஆதரவை தெரிவிச்சோம்.
  • 2018இல் ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கி சூட்ல பாதிக்கப்பட்ட நம்ம சொந்தங்களை நேர்ல சந்திச்சு ஆறுதல் சொன்னோம்.
  • 2021இல்  உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிட்டு ஜெயிச்சாங்க.
  • கல்வி விருது விழா நடத்தி, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் பரிசும் கொடுத்தோம்.
  • 2024இல் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பிச்ச உடனேயே சிஏஏவை எதிர்த்து அறிக்கை விட்டோம்.  எல்லாரும் கட்சி ஆரம்பிச்சுட்டுதான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் போவாங்க. ஆனா நாம ஒவ்வொரு வீட்டுக்குள்ளையும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியவே ஆரம்பிச்சிருக்கிறோம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.