போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார் முதல்வர் விஜய். அதே நாளில், தவெக அமைச்சர் சரத்குமார் போதை பொருளை பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவத் தொடங்கியது ஒரு வீடியோ. அதில் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது கிரிடிட் கார்ட்டில் போதை பொருளை தூளாக்கி பயன்படுத்துவதுபோல காட்சிகள் இடம்பெற, தவெக தலைமைக்கு இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சரத் தன்னுடைய குழந்தை, மனைவி சகிதமாக ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், தான் தூளாக்கியது போதை பொருள் அல்ல, அது குழந்தைக்கான மாத்திரை என்ற விளக்கம் அளித்தார்.
ஆனால், அமைச்சர் சரத் சொல்வது வடிகட்டிய பொய் என்று திமுக, அதிமுக, பாஜக என அத்தனை பேரும் ஓரணியில் தவெக அரசிற்கு எதிராக திரண்டனர். திமுக ஒரு படிமேலே சென்று இன்று மாநிலம் முழுவதும் அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தி வருகிறது.
அப்செட்டில் முதல்வர் விஜய்
இந்நிலையில், போதை பொருளுக்கு எதிராக பேசிய முதல்வர் விஜய், தன்னுடைய அமைச்சர் மீதே போதை பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகாரில் கடும் அப்செட் ஆகியிருப்பதாகவும், இது குறித்து தன்னுடைய முக்கிய தளகர்த்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அமைச்சரவையில் இருந்து சரத் நீக்கம் ?
இதனையடுத்து, சரத் குற்றமற்றவர் என்று நிரூபணம் செய்யும் வரை அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கலாமா? அல்லது இந்த விஷயத்தை மடைமாறும் வகையில் வேறு பிரச்னைகளை கிளப்பியோ அல்லது திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த வைத்தோ மடைமாற்றலாமா என்றெல்லாம் விஜயின் முக்கிய தளகர்த்தர்கள் தனியாக விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், உடனடியாக அமைச்சரவையில் இருந்து சரத்குமாரை நீக்கினால், அரசு மீது தேவையில்லாத அவப்பெயர் ஏற்படும் என்றும் சரத்குமார் போதைபொருள் பயன்படுத்தினார் என்பதை நாமே ஒப்புக்கொள்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இப்போதைக்கு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஓரிரு மாதங்களில் அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் சரத்குமாரை பொறுப்பில் இருந்து நீக்கிவிடலாம் என்ற பரிந்துரை முதல்வர் விஜயிடம் முன் வைக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய் உறுதி ?
இருப்பினும், சரத்குமார் உண்மையிலேயே போதை பொருளை பயன்படுத்தியிருந்தால், அதனை உறுதிப்படுத்திவிட்டு அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகவும், அது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரையில் சரத்குமார் முக்கிய கட்சி நிகழ்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.