தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அந்த ஆட்சியையும் சட்டமன்றத்தில் முதல்வர் விஜயையும் விமர்சித்து பேசி வருபவர் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அவர் தவெகவிற்கு எதிராக சிறப்பாக பேசிவருவதால், முக்கியமான விவகாரங்களில் அவரையே செய்தியாளர் சந்திப்பை நடத்த சொல்லியிருந்தது திமுக தலைமை. அதே நேரத்தில் தொலைக்காட்சி விவாதங்களிலும் மற்ற விருந்தினர்களோடு பங்கேற்று தவெக அரசுக்கு எதிராக வலிமையான தன் வாதத்தை எடுத்து வைத்து வருகிறார் சிவசங்கர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் உதவியாளர் ?
இந்நிலையில், சிவசங்கரை டார்கெட் செய்து அவரை முடக்க தவெக அரசு முடிவு செய்து, அவருக்கு எதிரான புகார்களையெல்லாம் ஒன்றொன்றாக தோண்டத் தொடங்கியிருக்கிறது. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது துறையில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்கள், வேலை வாங்கித் தருவதாக வாங்கப்பட்ட பணம் உள்ளிட்டவைகள் ஏதேனும் கிடைக்கிறதா என காவல்துறையை வைத்து தவெக அரசு அவருக்கு ஸ்கெட்ச் போட தொடங்கிய நிலையில், இளஞ்செழியன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
என்ன செய்தார் இளஞ்செழியன் ?
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 23 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய புகாரில் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என்று தகவல் பரவிய நிலையில், அவரை யாரென்றே தனக்கு தெரியாது என்று மறுத்தார் சிவசங்கர். இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சிவசங்கருக்கு இந்த மோசடியில் பங்கு இருப்பதாகவும் அவருக்கு பணத்திலும் பங்கு கொடுத்திருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இளஞ்செழியன் மீது வழக்கு பதிவு செய்து, அதையடுத்து வெளியான முதல் தகவல் அறிக்கையில் இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற சீனிவாசன் கொடுத்த புகாரில் இந்த கைதும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிவசங்கருக்கு சம்மன்
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இந்த வழக்கில் சம்மன் அனுப்பியிருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது இதேபோன்றதொரு புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அமலாக்கத்துறையினர் இந்த வழக்கில் உள்ளே வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்தார். இந்நிலையில், சிவசங்கர் மீதும் இதேபோன்றதொரு வழக்கை பதிவு செய்ய தவெக அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
தவெக அரசு மீதான எதிர்க்கட்சியின் குரலை அடக்க முயற்சி?
தவெக அரசின் குறைகளை வலிமையாக சுட்டிக்காட்டும் நபராக திமுகவின் சிவசங்கர் செயல்பட்டு வரும் நிலையில், அவரை வழக்கு மூலம் அச்சுறுத்தி முடக்குவதற்கு இதுபோன்ற புகார்களை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பயன்படுத்துவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
இந்நிலையில், சிவசங்கர் மீது வழக்கு போடப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தவெக அரசை கடுமையாக விமர்சிப்பதாலேயே முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு போடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.