500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
க.சே.ரமணி பிரபா தேவி June 29, 2026 08:44 PM

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவின் புதிய தலைமுறை எலக்ட்ரிக் கார் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. 'ஹோண்டா 0 சீரிஸ்' (Honda 0 Series) வரிசையில் உருவாகும் இந்த ஹோண்டா 0 ஆல்ஃபா மாடல், சிறந்த ரேஞ்ச் மற்றும் அதிநவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

2027-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த காரின் விவரங்கள் பின்வருமாறு:

வடிவமைப்பு மற்றும் தோற்றம்

இந்த கார் முற்றிலும் புதிய டெடிகேட்டட் எலக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்போர்ட்டியான செடான் அல்லது கூபே போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. காரின் வெளிப்புற வடிவமைப்பு மிகவும் ஏரோடைனமிக் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது காற்றழுத்தத்தை வெகுவாகக் குறைத்து காரின் ரேஞ்சை அதிகரிக்க உதவுகிறது. முன்புறம் சரிவான பானட், ஷார்ப்பான லைட்டிங் அமைப்பு மற்றும் காரின் ஒட்டுமொத்த எடையைக் குறைக்க இலகுரக பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மெல்லிய மற்றும் இலகுவான என்ற ஹோண்டாவின் புதிய வடிவமைப்பு கொள்கை இதில் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளது.

உட்புறம்

கார் வெளிப்புறத்தில் தாழ்வான ரூஃப்லைன் கொண்டிருந்தாலும், உட்புற கேபின் மிகவும் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் கிடைப்பதை ஹோண்டா உறுதி செய்துள்ளது. டேஷ்போர்டு முழுவதும் நீளும் வகையிலான அகலமான டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் குறைந்தபட்ச பிசிக்கல் பட்டன்கள் கொண்ட மினிமலிச டிசைன் இதில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

இந்த காரின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதன் பேட்டரி மற்றும் ரேஞ்ச் ஆகும். 50-75 kWh பேட்டரியில் வரும் இந்த எலக்ட்ரிக் கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், நடைமுறை பயன்பாட்டில் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதில் அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட மெல்லிய பேட்டரி பேக் தரைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

சார்ஜிங், பிற விவரங்கள்


இது அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இதன் மூலம் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும், 10 ஆண்டுகள் பயன்படுத்திய பிறகும் பேட்டரியின் திறன் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே குறையும் வகையில் இதன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.