மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
குலசேகரன் முனிரத்தினம் July 24, 2026 11:14 AM

CJP Protest Neet: மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரதான கோரிக்கைகளிலிருந்து, அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளன.

டெல்லியை உலுக்கிய மாணவர்கள்:

CJP எனும் அமைப்பால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம், தலைநகர் டெல்லியை உலுக்கி எடுத்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் மூன்று பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதை கண்டித்தும், ”வினத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் தேர்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்”என்பன போன்ற கோரிக்ககளை வலியுறுத்தியும் இளைஞர்கள் தீவிரமாக போராடி வந்தனர். ஆனால், அவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறி அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், மாணவர்களின் கோரிக்கைகளை நீர்த்துப்போக செய்யும் வகையில் அமைந்துள்ளன.

மைலேஜ் தேடும் அரசியல்வாதிகள்..!

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டதே ஆகும். எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி முழு போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டு இலக்கும் வெற்றிகரமாக அடையப்பட்டது. அரசியல் கட்சிகளின் பங்கேற்பும், கோரிக்கைகளை மடைமாற்றும் நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனால், தற்போதைய வினாத்தாள் கசிவிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தின் மூலம், அரசியல்வாதிகள் தங்களுக்கான ஆதாயத்தை தேடுவதில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று கூட பார்க்கவில்லை. போலீசாரால் தாக்கப்பட்ட மாணவர்களிடம் கூட நலம் விசாரிக்காமல், நேரடியாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுகிறேன் என சாலையில் அமர்ந்துவிட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் மத்திய அரசை அடிக்க நல்ல வாய்ப்பு என்பது போல போராட்ட களத்திற்கு வந்து, அரசியல் பேச தொடங்கினர்.

போராட்டத்தின் வடிவத்தையே மாற்றிய போராளிகள்

அரசியல்வாதிகள் ஒருபுறம் என்றால், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராளிகளின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த போராட்டத்தின் வடிவத்தையே மாற்றிவிட்டன.  டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக போராடுவதாக கூறி, தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற போராட்டங்கள் முதலமைச்சர் விஜயின் ஜனநாயகனுக்கு எதிரான போராட்டங்களாக காட்சியளித்தன. ஜனநாயகன் மற்றும் விஜய்க்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியபடியும் சிலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விசிகவின் ஆளுர் ஷாநவாஸ், இந்நாள் முதலமைச்சரை விமர்சித்தும், முன்னாள் முதலமைமைச்சரின் புகழ்பாடியும் பேசிக்கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்: PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு

படத்திற்கும், தவெகவிற்கு எதிரான போராட்டமா?

மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் போராடம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய இயக்குனர் அமீர், ஜனநாயகத்தை காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. இதேவேளையில் அங்கே ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது” என விஜயை விமர்சிக்கும் வகையில் பேசினார். தொடர்ந்து பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், “தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை ஏன் எந்த தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அது அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது” என வேறு பிரச்னைகளை எழுப்பினார். இந்த கோரிக்கைகளை தனி மேடையில் கூட பேசியிருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் இந்த கருத்துகள் அவசியம் தானா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்கள் தற்குறிகளா?

இதுபோக இணையதளத்திலும் சிலர் தமிழக இளைஞர்களை அறிவற்றவர்களாகவும், தற்குறிகளாகவும் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, “வடக்கு மாணவர்கள் எல்லாம் கல்விக்காக போராடுவார்கள் என கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் நம்மூர் மாணவர்கள் திரையரங்குகளில் கூடி கலையும் அறிவில்லா கூட்டமாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் விஜய் தான்” என பக்கம் பக்கமாக எழுதி வருகின்றனர். மாணவர்களின் போராட்ட களங்கள் ஒட்டுமொத்த அரசியல் மேடைகளாக மாறிவிட்டன. ஒரு கட்சிக்கு ஆதரவளித்த வாக்காளர்களை முட்டாள்கள் என ஏற்கனவே கூறி வந்தவர்கள், தற்போது படம் பார்க்க போவர்களை கூட முட்டாள்கள் என சித்தரிக்க தொடங்கியுள்ளனர். 

மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் அந்த நேரத்தில் கால்பந்தாட்ட உலகக் கோப்பை, ஒடிஸி போன்ற படங்களுக்கு ஃபயர்விட்டு வந்த நிலையில், தற்போது ஜனநாயகன் படம் தான் நீர் பிரச்னைக்கு காரணம் என்பது போன்று பேசி வருகிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் தற்கொலை என தொடங்கப்பட்ட போராட்டம், தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்க்கும், ஜனநாயகன் படத்திற்கு எதிரானதகாவும் மடைமாறியுள்ளன. ”ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும்” என்பார்கள், அப்படி நடக்க வேண்டிய இளைஞர்கள் போராட்டத்தை பல்வேறு தரப்பினரும் தங்களது பலவிதமான கோரிக்கைகள் மற்றும் அரசியல் லாபம் மூலம் நீர்த்துபோக செய்கின்றனர் என்பதே மாணவர்களின் கவலையாக மாறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.