CM Vijay: காவிரி நீர் மற்றும் மேகதாது திட்டம் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளாராம்.
தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் தொடர்பான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முதலமைச்சர் விஜய் பெங்களூருவிற்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீரும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து கடந்த 22ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அணைகளில் பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை கருத்து அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.