அமைச்சர் ராஜ்மோகன் மீது பா. ரஞ்சித்திற்கு ஏன் இவ்வளவு வன்மம்? சாதியை சொன்னது ஏன்? பழைய பகை?
குலசேகரன் முனிரத்தினம் July 24, 2026 02:14 PM

Pa Ranjith Vs TVK:  ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், ராஜ்மோகன் பேசிய பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

ராஜ்மோகனை சாடிய பா. ரஞ்சித்

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, சென்னையிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், ”தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை ஏன் எந்த தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அது அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு கூட குரல் கொடுத்ததில்லை” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

ராஜ்மோகனை குறிவைத்தது ஏன்?

பா. ரஞ்சித்குமார் குறிப்பிட்டதை போன்று தவெக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தாலும், ராஜ்மோகனை மட்டும் குறிப்பிட்டு பேசியது ஏன்? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்கு கடந்த காலத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலை மனதில் கொண்டே பா. ரஞ்சித் காழ்ப்புணர்ச்சியுடன் பேசியுள்ளார் என தவெகவினர் சாடுகின்றனர். கடந்த 2019ம் ஆண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித், “ராஜராஜனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையில் அவரது ஆட்சி காலம் என்பது ஒரு இருண்ட காலம். அந்த காலகட்டத்தில் தான் நில உரிமை பறிப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தது. ராஜ ராஜசோழன் ஒரு அயோக்கியன்” என ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பா. ரஞ்சித்திற்கு ராஜ்மோகன் பதிலடி..

பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு இருந்த ராஜ்மோகன், “ராஜ ராஜ சோழனை ஒரு அயோக்கியன், அவருடைய ஆட்சி காலத்தை பொற்காலம் என சொல்லாதீர்கள், கற்காலம் என குறிப்பிடுங்கள் என இயக்குனர் பா. ரஞ்சித் பேசியுள்ளார். இவர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். அதற்காக இவர் சொல்வது எல்லாமே சரி என ஏற்றுக்கொள்ள முடியாது. மாபெரும் ஆளுமைகளை சிறுமைப்படுத்துவது என்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது. ராஜ ராஜ சோழன் ஒரு பேரரசன். அவருடைய நிர்வாக திறமையை நாம் கொண்டாட வேண்டும்” என கூறியிருந்தார். மற்றொரு பேட்டியில்,அந்தணர்களுக்கு ராஜராஜன் நிலம் கொடுத்து உண்மை. அதற்காக யாருடைய நிலத்தையும் அபகரித்துக் கொடுக்கவில்லை. கொடுத்ததற்கு ஆதாரம் இருக்கிறது ஆனால் பறித்ததற்கான ஆதாரம் இல்லை. அவரு எங்கேயும் பறிக்கவில்லை. இதனை ஏற்காமல் பேசினால் அது விதண்டாவாதம்” என ராஜ்மோகன் பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பையே வன்மமாக தற்போது பா. ரஞ்சித் கொட்டித் தீர்த்துள்ளார் என தவெகவினர் குறிப்பிடுகின்றனர்.

பா. ரஞ்சித்திற்கு சரமாரி கேள்விகள்:

பா. ரஞ்சித்தை நோக்கி தவெகவினர் பல்வேறு கேள்விகளையும் சரமாரியாக எழுப்பி வருகின்றனர். அதன்படி, ”நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு என கூறிவிட்டு, சாதியை குறிப்பிட்டு பேசி முக்கிய பிரச்னையை மடைமாற்றுவது ஏன்? தலித் சமூகதை சேர்ந்தவர்கள் அமைச்சரானால் அவர்கள் தலித் பிரச்னைகளை பற்றி மட்டுமே பேச வேண்டுமா? சாதி அடிப்படையில் யாரும் இங்கு அமைச்சரகளாக்கப்படாதபோது, ஒருவரது சாதியை குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? கடந்த 2017ம் ஆண்டு கடைசியாக நீட் தேர்வு தொடர்பாக ஒரு ட்வீட் போட்ட பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் பா. ரஞ்சித் இந்த தேர்வு குறித்து பேசியது என்ன? தனிப்பட்ட வன்மத்தால் அமைச்சரை பொதுமேடையில் சாதியை குறிப்பிட்டு பேச வேண்டுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.