ஜனநாயகன் படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு நடிகை ஆனந்தி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் விஜயின் சினிமா கேரியரில் கடைசிப் படமாகும். இந்த படத்தில் நெல்சன் திலீப்குமார், அட்லீ, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் அடிப்படை கதையைக் கொண்டு ஜனநாயகன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆனந்தி தமிழ் சினிமாவில் தார தப்பட்டை, பறந்து செல்லவா ஆகிய படங்களில் நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான கருப்பு, கட்டா குஸ்தி 2, இதயம் முரளி ஆகிய படங்களிலும் ஆனந்தி நடித்துள்ளார். அப்படியாக ஜனநாயகன் படத்திலும் இவர் நடித்துள்ளார். ஆனால் படம் வெளியான நிலையில் அது இடம்பெறவில்லை. இந்தப் படத்தைக் காண ஆவலுடன் சென்ற ஆனந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் நிறைய படங்கள் நடிக்கிறேன். அது எல்லாம் எடிட்டிங்கில் நீக்கப்படுகிறது. அதற்கெல்லாம் நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால் ஜனநாயகன் படத்தில் நான் நடித்த காட்சி இடம் பெறாதது வருத்தமாக உள்ளது. நான் கம்பேக் கொடுக்கும்போது முதலில் கமிட்டான படம் இதுதான். ஜனநாயகன் பட ரிலீசுக்காக நான் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தேன். அதுவும் விஜய் உடனான படம் என்பதால் ரொம்ப ஆவலாக இருந்தேன். நான் சினிமாவில் நடிக்க வந்த காரணம் விஜய் தான். எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது கனவாக இருந்தது.
ஜனநாயகன் படம் சூப்பராக இருந்தது. எல்லாரும் கண்டிப்பாக வந்து பாருங்கள். இனிமேல் விஜய் படம் நடித்தார் என்றாலும் அதில் நடிக்க முயற்சி பண்ணுவேன். இருந்தாலும் இது அவருடைய கடைசிப்படமாகும். நான் மிகவும் மகிழ்ச்சியாக தியேட்டரில் காலை முதல் நாள் முதல் காட்சி பார்க்கப் போயிருந்தேன். நான் நடித்த காட்சி வரும் நினைத்தேன். அது எடிட்டிங்கில் நீக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் அதிர்ஷ்டமில்லாதவள். பரவாயில்லை” என கண்ணீருடன் ஆனந்தி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவருக்கு விஜய் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.