அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ எஸ்.காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் சட்டமன்ற சபாநாயகரிடம் அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார்.
குதிரை பேர புகார் - எஸ்.காமராஜ் மீது புகார்
தவெக ஆட்சி அமைக்க முயற்சித்தபோது மன்னார்குடி எம்.எல்.ஏ எஸ்.காமராஜிடம் தவெகவினர் கையெழுத்து வாங்கி, தங்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களிக்க குதிரை பேரம் நடத்தியதாக நள்ளிரவில் ஆளுநரிடம் சென்று பரபரப்பு புகார் கொடுத்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அதற்கு அடுத்த நாள் காமராஜை வைத்து செய்தியாளர் சந்திப்பையும் நடத்தி, தவெக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
தவெகவிற்கு ஆதரவளித்த காமராஜ் - கட்சியை விட்டு நீக்கிய தினகரன்
இதனையடுத்து, சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தினகரனின் அனுமதியின்றி தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார் மன்னார்குடி எம்.எல்.ஏ எஸ்.காமராஜ். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கினார். இந்நிலையில், குதிரை பேரத்திற்கு ஆட்பட்டு எஸ்.காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்ற சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது