17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
குலசேகரன் முனிரத்தினம் July 24, 2026 03:44 PM

புதிய தலைமை செயலகம் எங்கு?

புதிய தலைமை செயலக வளாகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனராம். பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் மற்றும் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம் ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளனவாம். ஆனால், அந்த இடங்களை தேர்வு செய்வதில் முதலமைச்சருக்கு உடன்பாடில்லையாம். இதுதொடர்பாக பேசிய கோட்டையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், “தமிழ்நாடு அரசின் தலைமை செயலகம் இயங்குவதற்கான ஒரு புதிய இடத்தின் அவசியத்தை முதலமைச்சர் விஜய் உணர்ந்துள்ளார். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஜார்ஜ் கோட்டைக்குள்  புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதை பாரம்பரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் கட்டுப்படுத்துகின்றன. வாகன நிறுத்துமிடம்  உள்ளிட்ட பல வசதிகள், தற்போதைய தலைமை செயலகத்தில் கவலைக்குரிய விஷயங்களாக இருந்து வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

”உயிரிழப்பு ஏற்படும் அபாயம்”

ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடி குறித்து பேசிய தமிழக தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜி. வெங்கடேசன், நிதித்துறை போன்ற சில துறைகளின் அலுவலகங்கள் மிகவும் நெருக்கடியாக இருப்பதால், ஊழியர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. தீ விபத்து போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வெளியேற முடியாமல் உயிரிழப்புகள் கூட ஏற்படக்கூடும்” என்றும் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் பலரிடமும் வலியுறுத்தப்பட்டு புதிய கட்டடத்திற்கு தலைமை செயலக நடவடிக்கைகளை மாற்ற பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Pa Ranjith: அமைச்சர் ராஜ்மோகன் மீது பா. ரஞ்சித்திற்கு ஏன் இவ்வளவு வன்மம்? சாதியை சொன்னது ஏன்? பழைய பகை?

புதிய தலைமை செயலகமும்.. முந்தைய முயற்சிகளும்..

கடந்த 2003ம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், ராணி மேரி கல்லூரி வளாகத்தில் ஒரு புதிய நிர்வாக வளாகத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர்.  2010-ஆம் ஆண்டில் அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு வளாகத்தில், முதலமைச்சர் கருணாநிதியால் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால், 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றி உத்தரவிட்டார்.  தலைமை செயலக நடவடிக்கைகளை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்.  2014 பிப்ரவரி 21 அன்று காணொளிக் காட்சி மூலம் ஆறு மாடிகளைக் கொண்ட அந்த மருத்துவமனையைத் திறந்து வைத்தார். கடைசியாக முந்தைய திமுக ஆட்சியின் போதும் ​​தலைமை செயலக ஊழியர்கள் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நிர்வாக வளாகத்தை ஓமந்தூரார் எஸ்டேட்டுக்கு மாற்றுமாறு வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அந்த திட்டமும் கைகூடவில்லை.

தலைமை செயலகத்தை சுற்றிப் பார்த்த CM விஜய்

இதனிடையே கடந்த மே மாதம் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, விஜய் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப் பார்த்தார். அப்போது புனித மேரி தேவாலயம், க்ளைவ் கட்டிடம், படைவீரர் முகாம், ஜார்ஜ் கேட், அருங்காட்சியகம் மற்றும் தேசியக் கொடிக் கூடம் உள்ளிட்ட முக்கியக் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், கோட்டையின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கினர். அப்போது அங்கு நிலவும் இட நெருக்கடி குறித்தும் கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் தான் தலைமை செயலக நடவடிக்கைகளை வேறு வளாகத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.