BIG Breaking: நாடு முழுவதும் நடைபெறும் நீட் போராட்டம் வாபஸ்… கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு…!!
SeithiSolai Tamil July 25, 2026 09:48 PM

நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் முக்கியக் கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாணவர் அமைப்புகளுடன் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக நடைபெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட 3 முக்கியக் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு ஏற்பதாக உறுதியளித்தது. இதில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், நீட் தேர்வு தொடர்பான விவகாரங்களால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் CJP அமைப்பினர் இணைந்து நடத்திய கூட்டறிக்கைக்குப் பின் இந்த அறிவிப்புகள் வெளியாகி, தொடர் போராட்டத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால் 28 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இனி மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் அறிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.