தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
நாகராஜ் July 25, 2026 11:44 PM

வீட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சமபவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் தேனி. நகரில் உள்ள பழைய தபால் நிலையம் ஓடை தெரு பகுதியில் ராதா என்கிற (60 வயது) மூதாட்டி வசித்து வந்தார். திருமணம் முடிந்து கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த இவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் அருகே உள்ள தனது சகோதரருக்கு சொந்தமான செக்கு எண்ணெய் கடையில் பல வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார்.


கடந்த 35 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இன்று காலை மூதாட்டி ராதா வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சயடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிகாலை சுமார் 3 மணியளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரின் வாய் மற்றும் கழுத்துப் பகுதியை கயிற்றால் இறுக்கி கட்டி கொலை செய்துள்ளதாகவும், மேலும் அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் ஆய்வு செய்து, கொலையாளியை பிடிப்பதற்கு துரித நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.


மேலும், மூதாட்டியின் விவரங்கள் குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை மற்றும் சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்துள்ளது. மூதாட்டி பணம் வைத்திருப்பதை அறிந்து பணத்திற்காக கொலை செய்தார்களா? அல்லது இந்த கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி நகரின் மையப் பகுதியில் நகை மற்றும் பணத்திற்காக தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.