உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பகுதியில், பூட்டிய வீட்டிற்குள் இருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பூஜா காலனியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே இது குறித்துக் உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, வீட்டிற்குள் சுமார் 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்து, அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் கிடப்பத்தைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்குத் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, உடற்பகுதிகள் மற்றும் வீட்டிலிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டுத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
இந்தப் பெண்ணின் உயிரிழப்பிற்குப் பிறகு, அவரது கணவர் மற்றும் குழந்தை இருவருமே மாயமாகியுள்ளதால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கணவன் மற்றும் குழந்தையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.