TN Govt Minerals: தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்களை கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட தடையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களுக்கு எம் சாண்ட், ஜல்லிகற்கள் மற்றும் கருங்கல் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சொந்த மாநில தேவைக்கே இந்த கனிமங்கள் குறைவாகவே இருப்பதால் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் சூழலில் விலைவாசி உயரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். அதேநேரம், இந்த ஏற்றுமதி தடையிலிருந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மட்டும்விலக்கு வழங்கப்பட்டுளது. விதிகளை மீறி இயங்கி வந்த சில குவாரிகள் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு மூடப்பட்டதால், உற்பத்தி குறைந்து கனிமங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், “மாநிலத்திற்குள் போதுமான விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்காக, பாறாங்கற்கள், அளவு குறைக்கப்பட்ட (உடைந்த அல்லது நொறுக்கப்பட்ட) பொருட்கள், எம்-சாண்ட், உலோகக் கூழ், சரளைக்கற்கள், ஆலைக்கற்கள், கைச் சக்கரைகள் மற்றும் கட்டிடம் மற்றும் சாலை கட்டுமானக் கற்கள் உள்ளிட்ட கற்களை எல்லை தாண்டி பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வது ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதில் தற்காலிகத் தடை விதிப்பதும் அடங்கும். இந்தத் திருத்தம், தற்காலிகத் தடை விதிப்பதை உள்ளடக்கி, மொத்தக் கற்கள் உள்ளிட்ட செதுக்கப்படாத கற்களை எல்லை தாண்டி பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதிக அளவிலான செதுக்கப்படாத கற்களும் மொத்தக் கற்களும் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவது கவனிக்கப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கனிம வள ஏற்றுமதியை தடுக்கும் மூன்று மாத காலத்திற்னான தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறும் எவர் மீதும், தற்போதைய சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, அண்டை மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் இது குறித்துக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். கனிமங்கள் மற்றும் பிற சரக்குகளின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாநிலங்களுக்குச் சீரான வடிவம் பெறாத கற்கள் (rough stone) மற்றும் ஜல்லி (aggregates) ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான இத்தற்காலிகத் தடையை அனைவரும் பின்பற்றுவதை உறுதிசெய்யும் வகையில் உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கனிமங்கள் மற்றும் பிற சரக்குகளின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் தொடர்புடைய துறை அதிகாரிகள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாநிலங்களுக்குச் சீரான வடிவம் பெறாத கற்கள் மற்றும் ஜல்லி ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான இத்தற்காலிகத் தடையை திறம்படச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இத்தடையை உடனடியாகப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய வேண்டும்” என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.