மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
என்.நாகராஜன் July 28, 2026 12:14 PM

நாகப்பட்டினம்:  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெ. மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பெலிக்ஸ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 447 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெ. மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்பு தனியார் கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. மீன்வளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பப் படிப்புகள் மீது மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 187 இடங்கள், மீன்வள பொறியியல் படிப்பில் 50 இடங்கள், உயிர்தொழில்நுட்பப் படிப்பில் 43 இடங்கள், உணவு தொழில்நுட்பப் படிப்பில் 42 இடங்கள், இளநிலை வணிக நிர்வாகவியல் (BBA) படிப்பில் 21 இடங்கள் மற்றும் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 78 இடங்கள் என மொத்தம் 447 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும், சமூகநீதியை உறுதி செய்யும் வகையில், மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீன்வள அறிவியல் படிப்பில் 24 இடங்களும், மீன்வள பொறியியல் படிப்பில் 2 இடங்களும் மீனவர் குடும்ப மாணவர்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 14-ஆம் தேதி வரை இணையவழியில் பெறப்பட்டன. மொத்தம் 15 ஆயிரத்து 585 விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவியதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த மாணவர் அனிஷ்குமார், மாணவி பிரியதனா மற்றும் அரிபாளையத்தைச் சேர்ந்த மாணவர் சேதுராஜன் ஆகியோர் தலா 200-க்கு 199.50 தகுதி மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவி அக்ஷயா 198.89 தகுதி மதிப்பெண்கள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார்.

மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு மற்றும் கூடுதல் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு முதலில் நடத்தப்படும். அதன் பின்னர், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெ. மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய தேதி, நேரம் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளம், மீன்வள பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிர்தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாணவர் சேர்க்கை ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்று தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.