சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயித்த நிலையில் அரசியலுக்கு வர நினைக்கும் தனுஷ், ராகவா லாரன்ஸ் போன்றவர்களை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் சினிமாத்துறையில் இருந்த ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியது. மக்கள் மாற்றம் வேண்டும் என வாக்களித்தது என பல சம்பவங்கள் இந்த தேர்தலில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் கோலோச்சி வரும் பல முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளது.
இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளிப்படையாகவே தவெகவில் இணைந்து அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். அதேசமயம் நடிகர் விஷால் விரைவில் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்து விட்டார். இப்படியான நிலையில் விஜய்க்கு எதிராக அதிக இளம் வயதினர் அடங்கிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள தனுஷை அரசியலுக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தனுஷின் கருத்துகள் ஒவ்வொன்றும் அரசியல் பயணத்திற்கு அச்சாரமாக அமைந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனுஷ் அரசியல் வருகைக்கு அடித்தளமாக அவரின் அப்பாவும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவில், “தனுஷை சுள்ளான் என குறிப்பிட்டு கடந்து வந்த பாதை என்ற பெயரில் நீண்ட பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், “அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார். தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார். படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என ரஜினி பட டைட்டில்களில் நடித்தார். அவரைப் போலவே வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.
ரஜினி எப்படி தலித் மக்கள் மீது பாசம் உள்ளதாக காலா, கபாலி படம் மூலம் காட்டிக் கொண்ட நிலையில் தனுஷூம் கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர். திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே. இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால் இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள். ஆனால் விஜய் ஜெயித்தபிறகு இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள். தனுஷ் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார். இவருக்குப் பின்னால் காவிக்கட்சி நிற்கிறது. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.