‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
இராஜா சண்முகசுந்தரம் July 28, 2026 05:14 PM

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியிலும் பங்குபெற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டின் ஆட்சியில் பங்குபெற்றிருப்பதை பெருமையாக காங்கிரஸ் கட்சி கருதி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவை ஒதுக்கியதில் ஏக கடுப்பில் இருக்கிறது பாஜக தேசியத் தலைமை. தவெக – காங்கிரஸ் கூட்டணி 2029 நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கும் பாஜக தேசிய தலைமை,  அந்த கூட்டணியை பிரிக்கும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் – அலெர்ட்டான பாஜக

விஜயுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்று, 2029 நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக சந்தித்தால்,அது தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக சென்றுவிடும் எனவும் மத்திய உளவுத்துறை சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அறிக்கை அளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளையெல்லாம் அடக்கி, ஒடுக்கி பெரிய போட்டியில்லாமல் இருந்த பாஜகவிற்கு, கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் பெரிய தலைவலியாக மாறி, அது மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானின் பதவியையே காவு வாங்கும் அளவிற்கு சென்றது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜதந்திரங்களையெல்லாம் கரைத்து குடித்தவர்களாக நினைத்துக்கொண்டிருந்த பாஜக தேசியத் தலைமையும் இந்த விவகாரத்தில் நிலைகுலைந்து போயிருந்தது.

இப்படியான சூழலில் இதுபோன்று இனி வருங்காலங்களில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்று மத்திய உள்துறை உளவுத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை உஷாராக்கியிருக்கிறது.

தவெக – காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க ஆபரேசன் TC  

இந்நிலையில், 2029ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே பிணக்கை ஏற்படுத்தும் வேலைகளிலும் பாஜக ரகசியமாக இறங்கியிருப்பதாகவும் இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் TC (Operation TamilNadu Congress) என பெயர் சூட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்திய பாஜக அரசை உடனடியாக பகைத்துக்கொள்ள விரும்பாத முதல்வர் விஜயும், அந்த கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் நேரடியாக பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும் தாக்கி பேசுவதையும், அவர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதையும் தொடர்ந்து தவிர்த்தே வருகின்றனர்.

அதனால்தான் தவெக அரசு மீது குதிரை பேரம் தொடர்பாக ஆளுநர் வரை திமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சென்று புகார் கொடுத்தும், இதுவரையில் இது தொடர்பாக ஒரு விளக்கத்தை கூட ஆளுநர் தரப்பு ஆளும் அரசிடம் கேட்கவில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்னர் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது மாதிரியான போக்கை மீண்டும் தவெக எடுத்தால், கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ வழக்கில் அமைச்சர்களுக்கும் ஏன் முதலமைச்சருக்கும் கூட சம்மன் கொடுத்து விசாரணை நடத்தும் ஐடியாவை கையில் வைத்திருக்கிறது பாஜக.

இடைத் தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் ?

இந்நிலையில், தவெக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவதை விரும்பாத பாஜக, 2029 தேர்தலுக்கு முன்னர் இந்த கூட்டணியை பிரிக்க வியூகம் வகுத்திருக்கிறது. இடைத் தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கான போதிய எம்.எல்.ஏக்கள் கிடைத்துவிட்டால், ஆட்சியில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் காங்கிரஸை கழட்டிவிட சொல்லி அழுத்தம் கொடுக்கவும் பாஜக மேலிடம் இப்போதே தயாராகி வருகிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

ராகுலோடு விஜய் கைகோர்ப்பதை விரும்பாத பாஜக

குறிப்பாக, டெல்லியில் நடைபெறும் வைகோவின் புத்தக வெளியீடு விழாவிற்கு முதலில் வருவதாக ஒத்துக்கொண்ட முதல்வர் விஜய், அலுவல் காரணமாக அங்கு செல்ல மறுத்ததிலும் பாஜகவின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி வரை வந்து ராகுல்காந்தியோடு ஒன்றாக விஜய் கரம்கோர்ப்பதை அவர்கள் விரும்பவில்லையென்றும், இது தொடர்பாக தவெக தலைமைக்கு பாஜகவின் முக்கிய நபர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே முதல்வர் விஜய் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்ல மறுத்ததாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலில் மூத்த தலைவராக இருக்கும் வைகோ-வின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு, பெயர் குறிப்பிட்டு அழைப்பிதழ் அடிக்கப்பட்ட பின்னர், இப்படியான முடிவு முதலமைச்சரால் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணங்கள் இல்லாமல் இருக்காது என்றும், முதல்வர் விஜயே மதிமுக-வுடன் ஒன்றாக பயணிப்பதை விரும்பவில்லையென்றும் கூறப்படுறது. அதனால்தான், விஜயின் காலடியில் வைகோ விழுந்துகிடக்கிறார் என்று தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிய நிலையிலும் கூட அவரை தவெக தலைமை கண்டிக்கவோ, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.