நடப்பாண்டு 2026-ல் உலகளவில் இணைய பயனர்களால் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் டாப் 10 செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பட்டியலை ‘ஒன் லிட்டில் வெப்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாளுக்கு நாள் ஏஐ கருவிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் இணைய உலகை எந்தெந்த கருவிகள் ஆட்சி செய்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
வெளியிடப்பட்டுள்ள இந்த தரவுகளின்படி, புகழ்பெற்ற ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) கருவி மொத்தம் 6,470 கோடி இணையப் பார்வைகளைப் பெற்று அசைக்க முடியாத முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ் துறையில் கோலோச்சும் ‘கேன்வா’ (Canva) 1,050 கோடி பார்வைகளுடன் இரண்டாவது இடத்தையும், கூகுளின் ‘ஜெமினி’ (Gemini) 690 கோடி பார்வைகளுடன் மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இந்த வரிசையில் மேலும் பல முக்கிய ஏஐ கருவிகளும் இடம்பிடித்துள்ளன; குறிப்பாக ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ (Google Translate) 480 கோடி பார்வைகளுடன் நான்காவது இடத்திலும், ‘டீப்சீக்’ (DeepSeek) 380 கோடி பார்வைகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மேலும், ‘கிளாட்’ (Claude) 340 கோடி, ‘கிரோக்’ (Grok) 250 கோடி, ‘பெர்பெப்ளெக்சிட்டி’ (Perplexity) 230 கோடி, ‘மேக்னிபிக்’ (Magnific) 180 கோடி மற்றும் ‘கேரக்டர் ஏஐ’ (Character AI) 170 கோடி இணையப் பார்வைகளைப் பெற்று முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.