ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? மம்தா வெளிநடப்பு; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!
Newstm Tamil July 27, 2024 08:48 PM

மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி அவர்களை எதிரிகளை போல் நடத்தக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைவரது கருத்துகளுக்கும் உரையாடல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அந்த கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். ஏன் என்னை தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். 

எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” எனக் கூறியிருந்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.